இலங்கைக்கு ; 123 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்கள்!! -முதலமைச்சர் ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்-
இந்தியாவின் தமிழகத்தில் இருந்து சுமார் 123 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு இன்று புதன்கிழமை கப்பல் ஊடாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ராஜபக்சே சகோதரர்களின் அரசாங்கம் மேற்கொண்ட தவறான கொள்கை முடிவுகளால் கடுமையான பொருளாதார சீரழிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கு அத்தியாவசியப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கி உதவுவதற்கு முன்வந்த தமிழக முதுலமைச்சர் மு.க.ஸ்டாலின் 80 கோடி ரூபா மதிப்புள்ள 40 டொன் அரிசி, 28 கோடி ரூபா மதிப்புள்ள 137 வகை மருந்துகள், 15 கோடி ரூபா மதிப்புள்ள 500 டொன் பால் பவுடர் ஆகியவை வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இதற்காக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மத்திய அரசும் இதற்கு அனுமதி வழங்கியது. இதையடுத்து இலங்கை மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
இந்த குழு இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணப்பொருட்களை அனுப்பும் பணியை மேற்கொண்டுள்ளது. நிவாரணப் பொருட்களை பார்சல் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்த பார்சலில் தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அன்புடன் என்று அச்சிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை துறைமுகத்தில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து கப்பலில் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார்.
முதற்கட்டமாக 8.84 கோடி ரூபா மதிப்புள்ள அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இருந்து 123 கோடி ரூபா மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளன.
அதன் பிறகு மீண்டும் 22 ஆம் திகதி 2 ஆவது கட்டமாக இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.