SuperTopAds

வேறு மத பெண்ணை காதலித்து திருமணம் செய்த இளைஞர்!! -கடப்பாரையால் தாக்கி கொலை-

ஆசிரியர் - Editor II
வேறு மத பெண்ணை காதலித்து திருமணம் செய்த இளைஞர்!! -கடப்பாரையால் தாக்கி கொலை-

வேறு மதத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்ததால் இளைஞரை பெண்ணின் சகோதரர்கள் வீதியில் வைத்து கடப்பாரையால் தாக்கி கொலை செய்துள்ளனர். 

தமது எதிர்ப்பினை மீறி மதம் மாறி திருமணம் செய்து கொண்டதால் குறித்த இளைஞரை தாம் கௌரவ கொலை செய்ததாக கைதான பெண்ணின் சகோதரர் பொலிஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

தெலுங்கானாவில் உள்ள ரங்காரெட்டி மாவட்டம், பில்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் 30 வயதான நாகராஜ் என்பவர் கனா போர் பகுதியை சேர்ந்தவர் செய்யது அஸ்ரி சுல்தான் என்பவரை கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 

இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்துள்ளது. இருப்பினும் இருவரும் தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர். ஆனால் பெண் வீட்டார் அவரை வெளியில் விடாமல் வீட்டில் வைத்து பூட்டியுள்ளனர். 

இந்த நிலையில் வீட்டில் இருந்து தப்பிய அஸ்ரி சுல்தான் ஐதராபாத்தில் நாகராஜ் தங்கியிருக்கும் அறைக்கு சென்றார். இதையடுத்து இருவரும் கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி லாலா ஆரிய சமாஜ் கோவிலில் வைத்து இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். 

இதனால் பெண் வீட்டார் ஆத்திரம் அடைந்தனர். அவரை தேடி ஐதராபாத்திற்கு சென்றனர். 

இதை அறிந்த காதல் ஜோடி அங்கிருந்து தப்பித்து விசாகப்பட்டணத்திற்கு சென்றுள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு மேலாக பெண்ணிக் வீட்டார் அமைதியாக இருந்ததால் தனது மனைவியை அழைத்துக் கொண்டு மீண்டும் ஐதராபாத்திற்கு அவர்கள் வந்துள்ளனர். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வழமை போன்று வேலைக்குச் சென்று வந்து கொண்டிருந்த நாகராஜை பின்தொடர்ந்து வந்த அஸ்ரி சுல்தான் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் பைக்கில் சென்ற நாகராஜ் மீது கடப்பாரையால் தாக்கினர். இதில் தலையில் படுகாயம் அடைந்த நாகராஜ் பைக்கிலிருந்து கீழே விழுந்தார்.

இதையடுத்து நாகராஜை கடப்பாறையால் சரமாரியாக குத்தினார். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஆட்கள் நடமாட்டம் நிறைந்த சாலையில் வாலிபர் ஒருவரை கடப்பாறையால் சரமாரியாக குத்தி கொலை செய்வதைக் கண்ட அப்பகுதியில் இருந்த பொது மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஐதராபாத் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து அஸ்ரி சுல்தான் சகோதரரை கைது செய்தனர். அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். 

விசாரணையின் போது தங்களை எதிர்த்து மாற்று மதத்தைச் சேர்ந்தவரை காதல் திருமணம் செய்ததால் நாகராஜனை கௌரவ கொலை செய்ததாக பொலிஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.