SuperTopAds

பலமான அணியாக களமிறங்குவோம்! - மாவை

ஆசிரியர் - Admin
பலமான அணியாக களமிறங்குவோம்! - மாவை

தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் பலமான அணியாக களமிறங்குமென, அக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடுவது மற்றும் ஆளணிகள் தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கிடையில் நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதில், தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, செயலாளர் துரைராஜசிங்கம், நா.ஸ்ரீகாந்தா, வினோநோதாரலிங்கம், விந்தன் கனகரட்ணம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இரவு 9 மணிவரை நீடித்த கலந்துரையாடலை அடுத்து செய்தியாளர்களைச் சந்தித்தமாவை சேனாதிராஜா, “கலந்துரையாடலின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மிகவும் ஆராயப்பட்டன. இதனடிப்படையில், 80 சதவீதமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. நடைபெறவுள்ள தேர்தலில் 3 கட்சிகளிற்குள்ளும் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை ஒன்றுபட்டு திரட்டுவதற்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இன்னும் ஓரிரு விடயங்கள் ஆராயப்பட வேண்டியிருப்பதனால், அந்த விடயங்களையும் தீர்மானித்த பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை பகிரங்கமாக அறிவிப்போம்.

ஐனநாயக போராளிகள் கட்சி உட்பட எம்முடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள ஏனைய இயக்கங்களுடனும் கலந்துரையாட வேண்டிய கட்டாயம் உள்ளது. அவர்களுடனும் கலந்துரையாடிய பின்னர் எதிர்வரும் 05ம் திகதி இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும். முக்கியமாக பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவம் பூரணப்படுத்தப்பட வேண்டியிருப்பதனால், மூன்று கட்சி சார்ந்த உறுப்பினர்களும், உரிய கவனம் செலுத்தி அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.