பூங்கா பராமரிப்பாளரை தாக்கிய புலி!!

ஆசிரியர் - Editor II
பூங்கா பராமரிப்பாளரை தாக்கிய புலி!!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள வெள்ளைப் புலிக்கு சிகிச்சை கொடுக்க முயன்றபோது பராமரிப்பாளரை அந்த புலி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பூங்கா நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு விலங்குகளுக்கும் ஒவ்வொரு பராமரிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே அந்த பூங்காவில் அரிய வகையான வெள்ளை புலி இனம் பார்வையாளர்களுக்காக காட்சிபடுத்தப்பட்டு வருகிறது.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 6 வெள்ளைப் புலிகள் தற்போது வசித்து வருகிறது. இதில் நகுலன் என்ற வெள்ளைப் புலி கடந்த சில நாட்களாகவே உணவு எடுத்துக்கொள்ளாமல் உடல்நலக் குறைவுடன் இருந்து வந்துள்ளது. 

இதனையடுத்து பராமரிப்பாளர்கள் உடனடியாக நகுலனுக்கு பரிசோதனை மேற்கொள்வதற்காக மருத்துவ குழுவினரிடம் தெரிவித்திருக்கிறார். மருத்துவ குழுவினர் பராமரிப்பாளர் உதவியுடன் வெள்ளைப் புலியை கூண்டில் வைத்து, பரிசோதனை மேற்கொள்வதற்காக முயற்சி மேற்கொண்டனர். 

அப்பொழுது வெள்ளைப் புலியின் மாதிரியை சேகரிக்க முயன்ற போது, கூண்டின் தாழ் சரிவர அடைக்கப்படாததால் புலி வெளியேறி பராமரிப்பாளரை தாக்கியது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட பூங்கா ஊழியர்கள் கூண்டை சரியான நேரத்தில் பூட்டியுள்ளனர். 

இதில் புலி தாக்கியதால் நிலை குலைந்து தடுமாறி கீழே விழுந்தவரை, உடனடியாக அவரை மீட்ட பூங்கா ஊழியர்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஊழியர் வீடு திரும்பியதாக பூங்கா நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.