சுழியில் சிக்கிக்கொண்டால் அதன் போக்கில் போய்த்தான் மீள முடியும் – டக்ளஸ் தேவானந்தா
தேசிய உற்பத்தி பொருளாதாரத்தின் மீதான அரசின் முன்னோக்கிய செயற்பாடுகள், விசமற்ற பசுமைப் புரட்சி விவசாய செய்கைகள் என்பன எமது நாட்டின் எதிர்கால சந்ததிகள் சார்ந்த சிறந்த முன்னெடுப்புகளாக எமது அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வந்தன என சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுழியில் சிக்கிக்கொண்டால் அதன் போக்கில் போய்த்தான் மீள முடியுமே தவிர, அதை எதிர்த்துக் கொண்டல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைப் பற்றிய அறிக்கை தொடர்பாக அரசாங்கக் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் தெரடர்ந்தும் கருத்து கூறுகையில் –
2020 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியானது 12.34 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. இது கடந்த ஆண்டில் 15.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்திருந்தது.
கடற்றொழில் அமைச்சைப் பொறுத்தவரையில். கடந்த ஆண்டு மீனின உற்பத்தியில் 318 மில்லியன் அமெரிக்க டொலர்களும், படகுகள் உற்பத்தியில் 37.81 மில்லியன் அமெரிக்க டொலர்களும் ஏற்றுமதி வருமானமாகக் கிடைத்துள்ளன என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
பொருளாதார ரீதியில் இத்தகையதொரு சாதகமான நிலை நோக்கி சென்று கொண்டிருந்த வேளையிலேயே இன்றைய நெருக்கடி நிலைமை உருவெடுத்திருக்கின்றது.
இன்று இந்த நாட்டில் எரிபொருள், எரிவாயு, மின்சாரம் போன்ற விடயங்கள் அதிகம் பேசப்படுகின்ற தட்டுப்பாட்டு விடயங்களாக இருக்கின்றன. தற்போது மருத்துவமனைகளில் மருந்துகளுக்கான தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நாளை இன்னும், இன்னும் தட்டுப்பாடுகள் வரலாம்.
எனவே, விரைந்த தீர்மானத்துக்கு நாங்கள் வரவேண்டும். விரைந்த தீர்வை நோக்கிச் செல்ல வேண்டும். சுழியில் சிக்கிக்கொண்டால் அதன் போக்கில் போய்த்தான் மீள முடியுமே தவிர, அதை எதிர்த்துக் கொண்டல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும்.
தற்போதைய நிலையில், சர்வதேச நாணய நிதியம் மற்றும், மாற்று வழிகள் தொடர்பில் சிந்தித்து செயலாற்றுவதே சந்தப்பத்திற்கேற்ற செயற்பாடாகும் எனக் கருதுகின்றேன்.
அந்த வகையில், சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளைப் பார்க்கின்றபோது, ஒரு சில விடயங்கள் மிகைப்படுத்தப்பட்டிருந்தாலும், ஏனைய விடயங்கள் தொடர்பில் நாங்கள் அறிவுசார்ந்து சிந்திக்க வேண்டியிருக்கிறது.
நாங்கள் கேட்கின்ற கடனுக்கான பரிந்துரைகளாக அல்லாத, சாதாரண அறிக்கையாகவே இது முன்வைக்கப்பட்டுள்ளது.
உணர்ச்சிகளாலோ, அல்லது சுயலாப அரசியல் நலன் சார்ந்த சிந்தனைகளாளோ இதனை தீர்மானிக்க இயலாது. அறிவு ரீதியாகவே தீர்மானிக்க வேண்டும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.