SuperTopAds

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை பல்கலைகழக மாணவர்களே நடத்தவேண்டும்.. -பொது அமைப்புக்கள் கோரிக்கை-

ஆசிரியர் - Editor I
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை பல்கலைகழக மாணவர்களே நடத்தவேண்டும்.. -பொது அமைப்புக்கள் கோரிக்கை-

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடாத்தும் பொறுப்பை இந்த ஆண்டு பல்கலைக்கழக மாண வர்களிடம் வழங்க வடமாகாணசபை இணங்கவேண்டும் என இரு பொது அமைப்புக்கள் கூட்டாக சேர்ந்து கோரிக்கை விடுத்துள்ளதுடன், அரசியல் சாயம் இல்லாமல் பல்கலைக்கழக மாணவர்களால் மட்டுமே நினைவேந்தலை உணர்வுபூர்வமாக அனுட்டிக்க முடியும் எனவும் கூறியிருக்கின்றனர். 

இன்று காலை யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த அகில உலக சைவ திருச்சபை மற்றும் வடபிராந்திய இணைந்த தொழிற்சங்கங்களின் சம்மேளனம் ஆகியனவும் சேர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடாத்தும் பொறுப்பை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திம் வழங்கவேண்டும். என கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் தெரிவித்ததாவது

முள்ளிவாய்க்கால் மண்ணில் 2009ம் ஆண்டு இறுதிப்போரில் படுகொலை செய்யப்பட்ட மக்களுடைய நினைவேந்தல் கடந்த 3 வருடங்களாக வடமாகாணசபையினால் நடத்தப்பட்டது. அதேபோல் பொது அமைப்புக்கள் மற்றும் கட்சிகளாலும் நினைவேந்தல் நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சகல தரப்புக்களையும் ஒன்றிணைத்து நடாத்தப்படவேண்டும். என பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்த நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பாக நேற்று முன்தினம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலிலும் கலந்து கொண்டு தமது கோரிக்கையினை முன்வைத்திருந்தனர். 

ஆயினும் வழக்கம்போல் வடமாகாணசபையே நினைவேந்தலை நடாத்தும் எனமுதலமைச்சர் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர். இந்நிலையில் அரசியல் சாயம் இல்லாமல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக நடாத்த ப்படவேண்டும் ஆகவே நினைவேந்தல் நடாத்தும் பொறுப்பை மாணவர்களிடம் கையளிக்கவேவண்டும் என பல பொது அமைப்புக்கள் கோரி வருகின்ற நிலையில் அகில உலக சைவ திருச்சபை மற்றும் வடபிராந்திய இணைந்த தொழிற்சங்கங்களின் சம்மேளனம் ஆகியனவும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடாத்தும் பொறுப்பை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திடம் வழங்கவேண்டும். என சேர்ந்து கோரிக்கை விடுத்துள்ளார்கள். 

இந்த விடயம் தொடர்பாக அகில உலகசைவ திருச்சபை சார்பில் பாலகுமார குருக்கல் கருத்து தெரிவிக்கையில், 

முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுடைய படு கொலைகளுக்கு பிராயச்சித்தம் தேடும் வகையில் உண்மையாகவும், உணர்வுபூர்வமாகவும் நினைவேந்தலை நடத்துவதற்கு பல்கலைக்கழக மாணவர்களால் மட்டுமே இயலும். இதற்குள் அரசியல் தலையீடுகள் இருப்பது அழகல்ல. ஆகவே வடமாகாணசபை இந்த ஆண்டு நினைவேந்தல் நடாத்தும் பொறுப்பை மாணவர்களிடம் வழங்கவேண்டும் என்றார். 

தொடர்ந்து வடபிராந்திய போக்குவரத்து சபையின் இணைந்த தொழிற்சங்கங்களின் தலைவர் அருள்பிரகாசம் கருத்து தெரிவிக்கையில், 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக நடக்கவேண்டிய ஒன்றாகும். அதனை முள்ளிவாய்க்கால் மண்ணில் போருக்குள் இருந்தவர்களால் மட்டுமே அறிய முடியும். முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதி போருக்குள் வாழ்ந்தவன் நான் எனது மருமகனை தோளில் சுமந்து சென்று உறவினர்கள் எவரும் இல்லாமல் தனியே புதைத்த அழியாத வடுக்களுடன் வாழ்பவர்கள் நாங்கள். இவ்வாறான வடுக்களுடன் மாகாணசபை உறுப்பினர்கள் வாழவில்லை. படுகொலை செய்யப்பட்ட மக்களுடைய நினைவாக ஒரு நினைவு தூபியை அமைக்க இதுவரை முடியாதவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அரசியல் இலாபம் தேடக் கூடாது. 

ஆகவே எந்த அரசியல் சாயமும் இல்லாமல் உணர்வுபூர்வமாகவும், உண்மையாகவும் அனைத்து தரப்பினரையும் இணைந்து நினைவேந்தலை நடத்தும் உரித்தும், வல்லமையும் பல்கலைக்கழக மாணவர்களிடம் மட்டுமே உள்ளது. ஆகவே வடமாகாணசபை இந்த ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடாத்தும் பொறுப்பை பல்கலைக்கழக மாணவர்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்றார்.