SuperTopAds

மும்பையை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்ற டெல்லி!!

ஆசிரியர் - Editor II
மும்பையை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்ற டெல்லி!!

ஐ.பி.எல் ரி-20 15 ஆவது தொடரின் 2 ஆவது போட்டி இன்று மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. 

நாணயசுழல்ச்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி,  20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ஓட்டங்களை பெற்றது. 

அதிகபட்சமாக இஷான் கிஷன் 81 ஓட்டங்களை விளாசினார். அணித்தலைவர் ரோகித் சர்மா 41 ஓட்டங்களை பெற்றார். டெல்லி அணி தரப்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதையடுத்து 178 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி, 32 ஓட்டங்களில் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. மறுமுனையில் கவனமாக ஆடிய துவக்க வீரர் பிருத்வி ஷா, 24 பந்துகளில் 38 ஓட்டங்களை எடுத்து ஆறுதல் அளித்தார். 

அதிரடியாக ஆடிய ஷர்துல் தாகூர் தனது பங்கிற்கு 22 ஓட்டங்களை பெற்று வெளியேறினார். 104 ஓட்டங்களில் 6 விக்கெட் இழந்த நிலையில், லலித் யாதவ், அக்சர் படேல் இருவரும் அபாரமாக விளையாடி, ஆட்டத்தின் போக்கை மாற்றினர். 

லலித் யாதவ் ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களும், அக்சர் பட்டேல் ஆட்டமிழக்காமல் 38 ஓட்டங்களும் விளாச, டெல்லி அணி 10 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது. 6 விக்கெட் இழப்பிற்கு 179 ஓட்டங்களை பெற்று டெல்லி அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கியது.