ரஷ்யாவிற்கு சீனா உதவினால் மோசமான விளைவுகளை எதிர்கொள்ளவேண்டிவரும்!! -அமெரிக்கா கடும் எச்சரிக்கை-
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு உதவி செய்தால் சீனா கடுமையான விளைவுகளை எதிர் நோக்க வேண்டிவரும் என்று அமெரிக்கா கடுமையாக எச்சரித்துள்ளது.
உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு சீனா உதவவேண்டும் இராணுவ உதவிகளை வழங்கவேண்டும் என ரஸ்யா வேண்டுகோள் விடுத்துள்ளதாக பெயர் குறிப்பிடாத அதிகாரிகள் அமெரிக்க ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளனர்.
சீன அமெரிக்க அதிகாரிகளிற்கு இடையில் சந்திப்பொன்று ரோமில் இடம்பெறவுள்ள நிலையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யா உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்த நாள் முதல் சீனா அதற்கு ஆதரவு வழங்கியுள்ள போதிலும் ஆயுத உதவிகளை வழங்கவில்லை.
எனினும் ரஸ்யா சீனாவிடமிருந்து இராணுவ உதவிகளை கோரியுள்ளது என அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவிடமிருந்து ஆளில்லாத விமானங்களை ரஷ்யா கோரியுள்ளது என தெரிவித்துள்ள அமெரிக்க ஊடகங்கள் சீனாவின்பதில் என்னவென்பது தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளன.
ரஸ்யாவிற்கு ஆதரவளித்தால் பாரிய தடைகள் உடனான விளைவுகளை எதிர்கொள்ளநேரிடும் என சீனாவிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தெரிவித்துள்ளதாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜக் சுலிவன் சிஎன்என்னிற்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.