சீனாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!! -பல நகரங்களில் முழு ஊரடங்கு: இலட்சக்கணக்கான மக்கள் வீடுகளில் முடக்கம்-
சீனாவில் மீண்டும் அதிகரித்து வரும் தினசரி கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக அங்கு பல்வேறு மாகாணங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்டத் துவங்கியது. கடந்த சில நாட்களாக அங்கு தினசரி கொரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனாவின் உள்ளூர் நகரங்களிலும், வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் மூலமாகவும் அங்கு கொரோனா பரவி வருவதாக கூறப்படுகிறது.
இதுவரை இல்லாத அளவிற்கு சீன நகரங்களில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி சீனாவில் சுமார் 3,400ற்க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சீனாவின் பல்வேறு மாகாணங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவின் ஷாங்காய் நகரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வட கொரிய எல்லைக்கு அருகில் உள்ள யாஞ்சி மாகாணம் சுமார் 7 இலட்சம் மக்கள் தொகையை கொண்ட தொழில் நகரமாகும். அங்கு இன்றைய தினம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதே போல் ஹாங்காங் எல்லைக்கு அருகே அமைந்துள்ள ஷென்சென் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு மாகாண பகுதிகளிலும் கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அங்குள்ள 1.3 கோடிக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளில் முடங்கினர். மேலும் சாங்ச்சுன், ஜிலியன் உள்ளிட்ட மாகாணங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.