பிரசாரத்தின்போது பிரசவ வலி!! -வேட்பாளருக்கு பிறந்த பெண் குழந்தை-
தென்காசி - கடையநல்லூர் நகராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ வேட்பாளருக்கு பிரசாரத்திற்கு இடையே பெண் குழந்தை ஒன்று பிறந்தது.
தமிழகத்தில் தற்போது நடக்கவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், சில இடங்களில் கர்ப்பிணிகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கர்ப்பிணிகளின் உடல்நிலையை கருத்தில்கொண்டு அவர்களின் கணவர் மற்றும் உறவினர்கள் அவர்களுக்காக பிரசாரத்தை மேற்கொண்டனர்.
ஆனால், தென்காசியில் பா.ஜ வை சேர்ந்த கர்ப்பிணி வேட்பாளர் ஒருவருக்கு பிரசாரத்தின்போது பிரசவ வலி ஏற்பட்டு பெண் குழந்தை பிறந்த நிகழ்வும் நடந்தேறியுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் குமந்தாபுரத்தை சேர்ந்தவர் ரேவதி (வயது 32). இவர் கடையநல்லூர் நகராட்சியில் பா.ஜ சார்பில் போட்டியிடுகிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர், கணவர் மற்றும் கட்சி தொண்டர்களுடன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இது அவருக்கு 3 ஆவது குழந்தையாகும். தாயும் சேயும் நலமாக உள்ளனர். குழந்தை பிறந்ததை அடுத்து, அப்பகுதி மக்கள் ரேவதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.