எடப்பாடி பழனிசாமி சிறைக்குச் செல்வார்!! -உதயநிதி ஸ்டாலின் பேச்சு-
எடப்பாடி பழனிசாமி மிக விரைவில் சிறைக்குச் செல்வார் என்று இன்று புதன்கிழமை ஆத்தூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றும் போது உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் சந்தைப்பேட்டை பகுதியில் இன்று புதன்கிழமை காலை தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் கட்சியினர் மத்தியில் பேசியதாவது:-
எடப்பாடி பழனிசாமியின் நண்பர் இளங்கோவன் பணத்தை பெற்றுக்கொண்டு, வீடுகளே இல்லாத பகுதிகளுக்கு தார்சாலை அமைத்து கொடுத்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் அவரும், எடப்பாடி பழனிசாமி உள்பட அனைவரும் ஜெயிலுக்குள் போய் கம்பி எண்ணுகிற அந்த சூழ்நிலை வரும்.
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி 2 நாட்களாக பிரசாரத்தில் சட்டமன்றத்தில் முடக்க போவதாக சொல்கிறார். எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைத்த மாதிரி, நாங்கள் கூவத்தூர் போய், சசிகலாவின் காலில் விழுந்து ஆட்சியை நாங்கள் பிடிக்கவில்லை. நாங்கள் மக்களிடத்தில் தான் வாக்குறுதி கொடுத்து மக்களை சந்தித்து, மக்களுடைய ஆதரவை பெற்று ஆட்சி அமைத்து இருக்கிறோம்.
என்னை எடப்பாடி பழனிசாமி ஒரு வாரமாக தேடிக் கொண்டிருக்கிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் நான் பொய் வாக்குறுதி கொடுத்து விட்டு இப்போது காணாமல் போய் விட்டார் என பிரசாரம் செய்து வருகிறார். நான் ஒரு வாரமாக மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறேன். இந்த பிரசாரத்தை முடித்துக் கொண்டு ஈரோடு மாவட்டத்துக்கு செல்கிறேன். இது உங்களுக்கு தெரிகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவில்லையே.
தி.மு.க.வின் ஒவ்வொரு திட்டங்களையும் மக்களிடத்தில் எடுத்து சொல்லி தி.மு.க.வினர் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்க வேண்டும். உள்ளாட்சியிலும் நல்லாட்சி தொடர தி.மு.க.வுக்கு வாக்களிக்குமாறு கேட்டு கொள்கிறேன் என்றார்.