SuperTopAds

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை விடுவியுங்கள்!! -ஸ்டாலின் கடிதம்-

ஆசிரியர் - Editor II
இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை விடுவியுங்கள்!! -ஸ்டாலின் கடிதம்-

இலங்கை சிறையில் உள்ள 21 தமிழக மீனவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:-

நாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு, அங்குள்ள காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதேபோன்று மற்றொரு படகில் தமிழகத்தை சேர்ந்த 6 மீனவர்கள், புதுச்சேரியை சேர்ந்த மூன்று மீனவர்களுடன் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டனர். 

2021 ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்த 3 வெவ்வேறு சம்பவங்களில் 68 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, தமிழகம் மற்றும் மத்திய அரசு மேற்கொண்ட கடும் முயற்சிக்குப் பின் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் தாயகம் திரும்ப காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் தமிழக மீனவர்கள் மீண்டும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மீனவ சமுதாய மக்களிடையே பீதியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

இலங்கை சிறைகளில் உள்ள நமது மீனவர்கள் நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்படுவது மீனவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் துயரத்திற்கு ஆளாக்குதோடு அந்த குடும்பங்கள் வறுமையிலும் தள்ளப்படுகின்றன.

இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு இந்தியா - இலங்கை மீனவர்களுக்கு இடையிலுள்ள நீண்டகால பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க உறுதியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். 

மேலும் சிறை பிடிக்கப்பட்டுள்ள 21 மீனவர்கள் மற்றும் இரண்டு விசைப் படகுகளை உடனடியாக விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அக் கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.