அதிக தொகையில் தண்டம் அறிவிக்கபட்டது இதுவே முதல் முறை!
கிளிநொச்சி-தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடுகுளம் நெத்தலியாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் உட்சபட்ச அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 25.01.2022 அன்று சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து உழவு இயந்திரங்களும் அதன் சாரதிகள் ஐவரும் மற்றும் சட்டவிரோதமாக உழவு இயந்திரத்துக்கு மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் 4 சந்தேகநபர்களும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு 27.01.2022 அன்று கிளிநொச்சி நீதிமன்றில் சந்தேக நபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது ஐந்து உழவு இயந்திரங்களுக்கு இலக்கத்தகடு இல்லாமை, வீதி அனுமதிப்பத்திரம் இல்லாமை, மது போதை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் பொலிஸாரால் முன்வைக்கப்பட்டது.
இதன்போது குறித்த வழக்கிற்காகக் குற்றம் சுமத்தப்பட்டவர்களிடம் 1150000 தண்டப்பணம் மன்றினால் அறவிடப்பட்டது.
கிளிநொச்சி நீதிமன்றில் அதிக தொகையில் தண்டம் அறவிடப்பட்டமை இதுவே முதல் முறையாகும் எனத் தருமபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம். சதுரங்க தெரிவித்துள்ளார்.