SuperTopAds

தமிழகத்தில் புதுப்பிக்கப்படும் விடுதலை புலிகள் அமைப்பு!! -கண்காணிப்பில் 3 அரசியல் வாதிகள்-

ஆசிரியர் - Editor II
தமிழகத்தில் புதுப்பிக்கப்படும் விடுதலை புலிகள் அமைப்பு!! -கண்காணிப்பில் 3 அரசியல் வாதிகள்-

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தமிழகத்தில் இருந்து புதுப்பிக்கும் முயற்சிகள் நடப்பதாக, என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு தமிழக அரசை எச்சரித்துள்ளது.

இதன்படி விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து வரும் மூன்று முக்கிய தமிழக அரசியல்வாதிகளையும் என்.ஐ.ஏ கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

லட்சுமணன் மேரி பிரான்சிஸ்கே என்ற இலங்கை பெண், கடந்தாண்டு அக்டோபரில் தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். புலிகள் அமைப்புடன் இவருக்கு தொடர்பு இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்நிலையில் இலட்சத்தீவுகள் அருகே, புலிகள் அமைப்பில் உளவு அதிகாரியாக இருந்த சற்குணம் என்ற செபாஸ்டியன் கடந்தாண்டு மார்ச்சில் கைது செய்யப்பட்டார். அவரிடம் ஏ.கே 47 ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன், 300 கிலோ 'ஹெராயின்' போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டன. 

புலிகள் அமைப்பை புதுப்பிக்க பணம் திரட்ட, போதைப் பொருள் கடத்தப்படுவதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் தமிழக போலீஸ் டி.ஜி.பி மற்றும் தலைமைச் செயலருக்கு, என்.ஐ.ஏ உயரதிகாரிகள் 3 பக்க அறிக்கையை அண்மையில் அனுப்பியுள்ளனர். அதில், தமிழகத்தில் இருந்து தங்கள் அமைப்பை மீண்டும் புதுப்பிக்க புலிகள் முயற்சித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

புலிகள் அமைப்பு மற்றும் பிரபாகரனுக்கு ஆதரவாக தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் 3 முக்கிய தமிழக அரசியல்வாதிகள், புலிகளின் முயற்சிக்கு உதவுவதற்கான வாய்ப்பு உள்ளதால், அவர்களை கண்காணிக்கும்படியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்து, என்.ஐ.ஏ அதிகாரிகள் 15 நாட்களுக்குப் பின் சென்னை வந்து விசாரணையை முடுக்கிவிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.