SuperTopAds

தேவாலயத்தில் குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தில் ஓய்வுபெற்ற வைத்தியர் ஆயுதங்களுடன் கைது!

ஆசிரியர் - Editor I
தேவாலயத்தில் குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தில் ஓய்வுபெற்ற வைத்தியர் ஆயுதங்களுடன் கைது!

கொழும்பு - பொரளை சகல புனிதர்கள் தேவாலயத்தில் கை குண்டு மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஓய்வுபெற்ற வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வைத்தியருடைய வீட்டிலிருந்து ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஆரம்பத்தில் கைதான 55 வயதான எம்பிலிப்பிட்டிய, பனாமுரவைச் சேர்ந்த சந்தேகநபரிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று(18) கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஓய்வுபெற்ற குறித்த வைத்தியரின் சொகுசு வீட்டிலிருந்து துப்பாக்கிகள் மற்றும் கூரிய ஆயுதங்கள் மீட்ககப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

4 கைத்துப்பாக்கிகள், ஒரு ரிவோல்வர், இரண்டு வாள்கள், ஒரு ரம்போ வகை கத்தி மற்றும் அடையாளம் காணப்படாத துப்பாக்கி ஆகியன இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற வைத்தியர் பிலியந்தலை மாவட்ட வைத்தியசாலையில் சேவையாற்றிய பின்னர் குறித்த பகுதியில் தனியார் கிளினிக் ஒன்றை நடாத்தி வந்துள்ளார்.

பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ள எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய சந்தேகநபர் இதற்கு முன்னர். குறித்த வைத்தியரின் தனியார் கிளினிக்கின் பாதுகாப்பு ஊழியராக கடமையாற்றியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

கைக்குண்டை கொள்வனவு செய்வதற்கு தேவையான பணத்தை வைத்தியரே வழங்கியுள்ளதாக, சந்தேகநபர் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றின் முதல் மாடியில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்துடன், ஓய்வுபெற்ற வைத்தியருக்கும் தொடர்பு உள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.