சமாதான உடன்படிக்கையின் படிப்பினைகள்…!
கடந்த வருடம் ஜூலை 29 மூன்று தசாப்தங்களைப் பூர்த்தி செய்துவிட்ட இந்திய இலங்கை சமாதான உடன்படிக்கை தொடர்பில் “ஓர் இனப்பிரச்சினையும் ஓர் ஒப்பந்தமும்’ என்ற நூலை “தி இந்து’ ஆங்கிலத் தினசரியின் இணையாசிரியரான தி.ராமகிருஷ்ணன் தமிழில் எழுதி இவ் வருடம் ஜனவரியில் சென்னையில் வெளியிட்டிருந்தார்.அந்த நூலை அறிமுகப்படுத்தும் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக அவர் இப்போது இலங்கை வந்திருக்கிறார்.மலையகத்தில் கண்டியிலும் வடக்கில் யாழ்நகரிலும் வார இறுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுகளுக்குப் பிறகு மூன்றாவது நிகழ்வு தலைநகரில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் இன்றையதினம் மாலை நடைபெறுகிறது.
மூத்த பத்திரிகையாளரும் திறனாய்வாளருமான கே.எஸ்.சிவகுமாரன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் பிரதம அதிதியாகக் கலந்துகொள்கிறார்.சமாதான உடன்படிக்கையை அடுத்து உருவாக்கப்பட்ட இணைந்த வடக்கு — கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சரான அண்ணாமலை வரதராஜப்பெருமாளும் முன்னாள் இந்து காலசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் பி.பி.தேவராஜும் கருத்துரைகளை வழங்க கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் முன்னாள் தலைவர் கலாநிதி வி.ரி.தமிழ்மாறன் நூல் ஆய்வுரையை நிகழ்த்துவார்.
இந்த நூல் அறிமுக நிகழ்வு தொடர்பிலான அழைப்பிதழ்களைக் கையளித்தபோது கட்டுரையாளரின் நண்பர்களான ஊடகவியலாளர்களில் பெரும்பாலானவர்கள் இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையைப் பற்றி யார் இப்போது இங்கே அக்கறைப்படுகிறார்கள் என்ற கேள்வியையே கேட்டார்கள்.அந்தக் கேள்வியில் அர்த்தம் இல்லை என்று எவரும் எடுத்த எடுப்பிலேயே கூறிவிடவும் முடியாது.
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கெனக் கூறிக்கொண்டு முன்னாள் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவும் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும்1987 ஜூலை 29 கொழும்பில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த நிலையில் சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார்கள்.
இலங்கைப் பிரச்சினையில் 1983 கறுப்பு ஜூலைக்குப் பின்னரான இந்தியாவின் நேரடித் தலையீட்டின் உச்சக்கட்டமாக அமைந்த அந்த உடன்படிக்கையை அடுத்து மாகாண சபைகள் முறையை அறிமுகப்படுத்துவதற்காக இலங்கையின் அரசியலமைப்புக்கு 13 வது திருத்தம் கொண்டுவரப்பட்டது.மாகாணசபைகள் முறையும் கூட இவ்வருட இறுதியில் 30 வயதை எட்டவிருக்கும் நிலையில் இனப்பிரச்சினைக்கான அரசியல் இணக்கத்தீர்வு குறித்து இன்னமும் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்.
இதை நன்குணர்ந்தவராகவே நூலாசிரியர் ராமகிருஷ்ணன் முதல் அத்தியாயத்தை “என்? இப்போது?’ என்ற தலைப்புடன் தொடங்கியிருக்கிறார்.
“உலகளவிலும் கூட இந்த சமாதான உடன்படிக்கையை இனப்பிரச்சினையைத் தீர்த்துவைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியமான முயற்சியாகத்தான் இன்றைக்கும் பார்க்கிறார்கள்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் 2015 செப்டெம்பரில் ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சமர்ப்பித்த அறிக்கையில் இந்த உடன்படிக்கையை அவ்வாறாகத்தான் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கை தோல்வியில் முடிந்ததாகத்தான் கருதப்படுகிறது.இது தோல்வியில்தான் முடிந்ததா? இதற்கு இன்னமும் உயிர் உள்ளதா? இதன் படிப்பினை என்ன? இதை நன்கு பயன்படுத்தியிருந்தால் 2009 மேயில் முடிந்த ஈழப்போர் சந்தித்த பேரழிவுகளைத் தவிர்த்திருக்க முடியுமா என்பதையெல்லாம் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஆராய்வது உகந்ததாக இருக்கும் என்று கேள்விகளை அடுக்கி விளக்கமளித்திருக்கும் நூலாசிரியர் இதைத்தான் இந்தப் புத்தகம் செய்ய முனைந்திருக்கிறது என்பதை முதலிலேயே கூறிவிடுகிறார்.
“இந்து’ பத்திரிகைக்காக சுமார் ஒன்றரை ஆண்டுகள் (2015 ஏப்ரில்- 2016 ஆகஸ்ட் ) கொழும்பில் பணியாற்றியபோது சந்தித்த அரசியல், பொருளாதார, சமூக மற்றும் வெளியுறவுப் பிரமுகர்களுடனான கலந்துரையாடல்களே தன்னை இந்தப் புத்தகத்தை எழுதத் தூண்டுதலாக இருந்தன என்பதை ராமகிருஷ்ணன் குறிப்பிடத்தவறவில்லை. குறிப்பாக, உடன்படிக்கையினால் ஏற்பட்ட அரசியல் விளைவுகளைப் பற்றி பெரிதும் விவாதிப்பதே தனது நோக்கம் என்றும் இராணுவ உத்திகளைப் பற்றியோ அதனால் ஏற்பட்ட விளைவுகளைப் பற்றியோ அதிகமாக விவாதிக்க முற்படவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. சமாதான உடன்படிக்கை கைச்சாத்திட்டதற்குப் பின்னர் 1987 அக்டோபருக்கு பிறகு ஓடிய மாதங்கள் காலத்தை வீணடித்ததாகவே இருந்தன என்ற ஒரு வரியிலேயே நூலாசிரியர் இந்திய அமைதிக்காக்கும் படை வடக்கு கிழக்கு மாகாணங்களில் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளின் பயனற்ற தன்மையை இரத்தின சுருக்கமாக சொல்லிவிட்டார்.
உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட வேளையில் இந்திய வெளியுறவுச் செயலாளராக இருந்தவர் தமிழ் நாட்டவரான ஏ.பி.வெங்கடேஸ்வரன். இலங்கை பிரச்சினையை ராஜீவ் காந்தியும் அவருக்கு நெருக்கமானவர்களும் கையாண்ட முறையை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ராஜீவ் காந்தியுடன் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து வெளியுறவுச் செயலாளர் பதவியில் அவரால் தொடர்ந்து இருக்கவும் முடியவில்லை. இந்தியப்படைகள் இலங்கைக்கு செல்கின்ற போது அந்நாட்டில் நிலவுகின்றதையும் விட மிகவும் மோசமான நிலையே அந்தப்படைகள் திரும்பிவரும்போது அங்கு ஏற்பட்டிருக்கும் என்று வெங்கடேஸ்வரன் அன்று சொன்ன கருத்து ராமகிருஷ்ணனின் இந்த வரியை வாசிக்கும் போது தவிர்க்க முடியாமல் நினைவிற்கு வருகிறது.
கடந்த வருடம் பெப்ரவரியில் இந்திய வெளியுறவுச் செயலாளராக இருந்த சுப்பிரமணியம் ஜெய்சங்கர் கொழும்புக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது சமாதான உடன்படிக்கை தொடர்பில் வெளிப்படுத்திய கருத்துக்கள் காரணமாக முதல் அத்தியாயத்தைத் தொடங்கும்போதே அந்த விஜயம் பற்றி ராமகிருஷ்ணன்குறிப்பிடவேண்டியிருந்தது. அதைத் தவிர்க்க அவரால் முடியவில்லை. ஏனென்றால் சமாதான உடன்படிக்கை தொடர்பில் புதுடில்லியின் தற்போதையய மனநிலையை ஜெய்சங்கரின் கருத்துக்கள் வெளிச்சம்போட்டுக்காட்டியிருந்தன.
இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழுவொன்று ஜெய்சங்கரைச் சந்தித்து தமிழர் பிரச்சினையின் நிலைவரங்கள் குறித்து விளக்கமளித்தது.அச் சந்திப்பில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்( ஈ.பி.ஆர்.எல்.எவ்.) தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வடக்கு — கிழக்கு இணைப்பு விவகாரம் குறித்து பிரத்தியேகமாக ஜெய்சங்கரின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.சமாதான உடன்படிக்கையின் அடிப்படையில் இந்தியாவுக்கு ஒரு கடப்பாடு இருப்பதால் இரு மாகாணங்களையும் மீண்டும் இணைப்பதற்கான ஏற்பாட்டைச் செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திடம் புதுடில்லி கேட்கவேண்டும் என்ற வேண்டுகோளை பிரேமச்சந்திரன் முன்வைத்தார்.
அதற்குப் பதிலளித்த ஜெய்சங்கர் இணைப்பை மீண்டும் செய்யுமாறு இலங்கையை இந்தியா இனிமேல் வற்புறுத்தப்போவதில்லை. 1987 சமாதான உடன்படிக்கைக்குப் பிறகு இதுவரையான காலகட்டத்தில் பெருமளவு நிகழ்வுப் போக்குகள் இடம்பெற்றுவிட்டன. இணைப்பை மீண்டும் செய்வது இக்கட்டத்தில் கஷ்டமானது. கடந்த காலத்துக்குத் திரும்பிச்செல்ல முடியாது என்பதால், கொழும்பில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையடுத்து தோன்றியிருக்கக்கூடிய பல்வேறு வாய்ப்புக்களைப் பயன்படுத்தி தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதிலேயே சகல தரப்பினரும் கவனம் செலுத்தவேண்டும்.
அதுவே சிறந்தவழி என்று குறிப்பிட்டார். மேலும், அரசியல் தீர்வுடன் சம்பந்தப்பட்ட ஏனைய சகல விவகாரங்களையும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு என்ற ஒரு பிரச்சினைக்கு பணயமாக வைத்திருப்பது விவேகமான செயலாக இருக்காது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் கூறிய அவர் இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் இணைப்பு விவகாரத்தை தமிழர்கள் தொடர்ந்தும் முக்கியத்துவப்படுத்தினால் இந்தியாவுக்கு ஆட்சேபனை எதுவுமில்லை. காலத்துக்குக் காலம் வரலாறு புதிய வாய்ப்புக்களைத் தருகிறது. அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளாவிட்டால் இறுதியில் தமிழர்கள் எதையுமே பெறமுடியாத நிலையே ஏற்பட்டுவிடவும் கூடும் என்று எச்சரிக்கையும் செய்தார்.
தமிழர் பிரச்சினை என்று வரும்போது எந்தவொரு விவகாரத்திலும் இலங்கை அரசாங்கத்தின் மீது இந்தியா எந்தவொரு நெருக்குதலையும் இனிமேல் பிரயோகிக்கப் போவதில்லை அல்லது நெருக்குதலைப் பிரயோகிக்கவேண்டுமென்று தமிழர்கள் இனிமேல் எதிர்பார்க்கக் கூடாது என்ற செய்தியையே ஜெய்சங்கரின் கருத்துக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி உணர்த்தின.தங்களது பிரச்சினைக்கான தீர்வைப் பொறுத்தவரை, இந்தியாவிடமிருந்து எதிர்பார்க்கக் கூடியவற்றின் மட்டுப்பாடுகளைத் தமிழர்கள் புரிந்துகொண்டுதான் இனிமேல் தங்களது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும் என்பதை ஜெய்சங்கரின் வார்த்தைகள் விளங்கவைத்தன.
இத்தகைய பின்புலத்திலேயே சமாதான உடன்படிக்கை தொடர்பில் இந்தியாவுக்கு இன்று இருக்கக்கூடிய அக்கறையின் இலட்சணத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். ஜெய்சங்கர் இப்போது வெளியுறவுச் செயலாளராக இல்லை என்றபோதிலும் அவர் வெளிப்படுத்தியதே இன்றும் புதுடில்லியின் நிலைப்பாடாகத் தொடர்கிறது என்பதில் சந்தேகமில்லை.(கொழும்பில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையடுத்து தோன்றியிருக்கக் கூடிய வாய்ப்புக்களைப் பயன்படுத்தி தமிழர்களின் உரிமைகளைப் பெறுவதில் கவனம் செலுத்தவேண்டும் என்று கடந்த வருடம் ஜெய்சங்கர் சொன்னபோது புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கான செயன்முறைகள் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருந்தன.
ஆனால், இப்போது மாறிவிட்ட அரசியல் சூழ்நிலைகளில் அந்தச் செயன்முறைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் தோன்றுமென்று எதிர்பார்க்கவே முடியாது.அது குறித்து இங்கு விரிவாக ஆராய்வது சாத்தியமில்லை.)
சிங்கள அரசியல் சமுதாயத்தைப் பொறுத்தவரை அது சமாதான உடன்படிக்கையையும் அதன் விளைவான மாகாண சபை முறையையும் இலங்கை மீது இந்தியாவினால் பலவந்தமாகத் திணிக்கப்பட்டவையாகவே நோக்குகிறது. 13 வது திருத்தம் தொடர்பில் கொழும்பு அரசாங்கங்கள் கடைப்பிடித்த அணுகுமுறை குறித்து முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்தியாவில் வைத்தே ஒரு தடவை தெரிவித்த கருத்தை நினைவுபடுத்துவது இத் தருணத்தில் பொருத்தமானதாக இருக்கும்.
2009 மேயில் உள்நாட்டுப் போர் முடிவடைவதற்கு ஒரு சில மாதங்கள் முன்னதாக ராஜீவ் காந்தி பற்றி முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர் எழுதிய நூலொன்றின் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக திருமதி குமாரதுங்க டில்லி சென்றிருந்தார்.அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலில் எமது இனப்பிரச்சினை குறித்து பிரஸ்தாபித்தபோது அவர் சமாதான உடன்படிக்கைக்குப் பிறகு இலங்கையில் பதவியில் இருந்த சகல அரசாங்கங்களுமே உடன்படிக்கையின் ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படாதிருப்பதை உறுதிசெய்துகொண்டன என்று குறிப்பிட்டார்.
மாகாணசபைகள் முறை அறிமுகப்படுத்தப்பட்டு 30 வருடங்கள் நிறைவடையப்போகின்ற போதிலும், 13 வது திருத்தத்தில் உள்ள அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த கொழும்பு அரசாங்கங்கள் தயாராயிருந்ததில்லை. இந்தியா அக்கறைப்படாத பட்சத்தில் சமாதான உடன்படிக்கையின் முக்கியமான எந்தவொரு ஏற்பாட்டையும் நடைமுறைப்படுத்துவது குறித்து இலங்கை கரிசனை காட்டப்போவதில்லை.உடன்படிக்கைக்குப் பின்னரான காலகட்டத்தில் அதுவும் குறிப்பாக பெரிதும் மாறிவிட்ட புவிசார் அரசியல்நிலைவரங்களுக்கு மத்தியில் இது விடயத்தில் இலங்கை மீது எந்த நெருக்குதலையும் பிரயோகிக்க புதுடில்லி முன்வரப்போவதில்லை.
அதற்கான தேவை தனக்கு இப்போது இருப்பதாக இந்தியா கருதவில்லை. இருநாடுகளினதும் அரசாங்கத் தலைவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளின்போது,இராஜதந்திர மட்டங்களிலான ஊடாட்டங்களின்போது 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அல்லது அந்தத் திருத்தத்துக்கு அப்பால் செல்வது தொடர்பில் இலங்கைத் தரப்பினால் உறுதிமொழிகள் வழங்கப்பட்டுவந்திருக்கின்றனவே தவிர, அவை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. இந்தியாவைச் சமாளிப்பதற்கான ஒரு தந்திரோபாயமாகவே அந்த உறுதிமொழிகளை கொழும்பு பயன்படுத்திவந்திருக்கிறது. அவற்றை நடைமுறைப்படுத்தவில்லை என்றுதிருப்பிகேட்கவேண்டுமென்ற கரிசனை இந்தியாவுக்கு இருக்குமென்றும் எதிர்பார்ப்பதற்கில்லை. இதுதான் சமாதான உடன்படிக்கை தொடர்பிலான புதுடில்லி மனோநிலையின் இன்றைய யதார்த்தம்.
சமாதான உடன்படிக்கையை இலங்கையோ, இந்தியாவோ முறைப்படி கைவிடவில்லையே தவிர மற்றும்படி அதை இரு நாடுகளும் உரிமைகொண்டாடுவதில்லை என்பதே உண்மையாகும்.ஆனால், நாம் விரும்புகின்றோமோ இல்லையோ சமாதான உடன்படிக்கைக்குப் பிறகு இலங்கையில் அதிகாரப்பரவலாக்கல் தொடர்பிலான அரசியல் விவாதங்கள் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை அடிப்படை அளவுகோலாகக் கொண்டே பெரும்பாலும் அமைந்திருக்கின்றன.
மாகாணசபைகள் முறையை இனப்பிரச்சினைக்கான தீர்வாகத் தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தமிழர்கள் கூறிவருகின்ற போதிலும் அதில் பங்கேற்காமல் இருக்கவும் அவர்களால் முடியவில்லை. 13வது திருத்தத்தை ராமகிருஷ்ணன் இரு நாடுகளும் கைச்சாத்திட்ட உடன்படிக்கையின் “நிரந்தர சாட்சி’ என்று வர்ணித்திருக்கிறார்.
புதிய அரசியலமைப்பொன்றை வரைவதற்கு அண்மைக்காலத்தில் முன்னெடுக்கப்பட்டுவந்த செயன்முறைகளின்போது அதிகாரப்பரவலாக்கல் விவகாரத்தைப் பொறுத்தவரை பரிசீலனைக்கு எடுக்கப்பட்ட யோசனைகள் 13 வது திருத்தத்தின் ஏற்பாடுகளை விடவும் பெருமளவுக்கு அதிகமானவையாக அமைந்திருக்கின்றன என்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பல தடவைகள் கூறியிருக்கிறார். தற்போது மாகாணசபைகளுக்குச் சட்டரீதியாக இருக்கின்ற அதிகாரங்களைக்கூட நடைமுறைப்படுத்த அனுமதிக்காத சிங்கள அரசியல் சமுதாயத்தை 13 வது திருத்தத்தில் உள்ளதை விடவும் கூடுதல் அதிகாரங்களைக் கொண்டதான ஏற்பாடுகளை புதியதொரு அரசியலமைப்பில் உள்ளடக்குவதற்கு இணங்கவைக்க முடியுமா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
தனது நூலில் “ஒப்பந்தம் வெற்றியா, தோல்வியா?’ என்ற தலைப்பிலான அத்தியாயத்தில் ராமகிருஷ்ணன்வாழ்க்கையில் பல விடயங்களைத் தெள்ளத்தெளிவாக கறுப்பு என்றோ வெள்ளை என்றோ கூறிவிடமுடியாது.அந்தப் பார்வையுடன் தான் சமாதான உடன்படிக்கையையும் பார்க்கவேண்டும்.உடன்படிக்கை தோல்வியில் முடிந்தது என்று மேலெழுந்தவாரியாக மிக எளிதில் கூறிவிடமுடியும்.ஆனால், இந்த உடன்படிக்கையினால் உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் சட்டப் பிரிவு இன்றைக்கும் உயிருடன்தான் உள்ளது. அதில் உயிரோட்டமும் உள்ளது’ என்று குறிப்பிட்டிருக்கின்றார்.
13 வது திருத்தம் கொண்டுவரப்பட்டதற்குப் பின்னரான கடந்த மூன்று தசாப்த காலத்தில் இலங்கையில் பல தடவைகள் அரசியலமைப்புச் சீர்திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன என்ற போதிலும்,அந்த முயற்சிகளின்போது அதிகாரப்பரவலாக்கல் தொடர்பான முன்மொழிவுகள் 13 வது திருத்தத்தை விடவும் மேன்மையானவையாக இருந்தபோதிலும் அவற்றை முன்மொழிவுகள் என்பதற்கு அப்பால் முன்னெடுக்கமுடியாமல் போய்விட்டது. ஆனால், 13 வது திருத்தம் மாத்திரமே அரசியலமைப்புச் சட்டத்தில் ஒரு அங்கமாகத் தொடர்ந்து இருந்துவருகிறது என்று நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்.
உடன்படிக்கையின் மிகச்சிறப்பான அம்சமே இலங்கையை “ஒரு பல்லின, பன்மொழி, பன்மைச் சமூகம்’ என்று அங்கீகரித்தது தான். இலங்கையின் இரு குடியரசு அரசியலமைப்புகளுமே ஒவ்வொரு குடிமகனுக்கும் தங்களது மதத்தைப் பின்பற்றுவதற்கான சுதந்திரத்தை வழங்கியிருந்த போதிலும், இனம், மதம் மற்றும் மொழியின் பெயரால் பாரபட்சம் காட்டப்படமாட்டாது என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், இலங்கை ஒரு பன்முகச் சமூகம் என்ற சிந்தனை அவற்றில் இல்லை என்று சுட்டிக்காட்டியிருப்பதன் மூலமாக ராமகிருஷ்ணன் சமாதான உடன்படிக்கையின் நேர்மறையான தாக்கத்தை விளக்க முயற்சித்திருக்கிறார்.
உடன்படிக்கையின் விளைவாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்பட்டமை தமிழ் அரசியல் கட்சிகளுக்குக் கிடைத்த மிகப்பெரிய போனஸ் என்று வர்ணித்திருக்கும் அவர் அதைப் பயன்படுத்தத் தெரியாமல் கைநழுவவிட்டதற்கு தமிழ்த் தரப்பினர் தங்களைத்தான் நொந்துகொள்ள வேண்டும் என்று குறைகூறியிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது.
இலங்கையிலே பண்டா – செல்வா ஒப்பந்தம் தொடக்கம் தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகள் வரை அதிகாரப்பரவலாக்கல் மூலமாக இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக்காண்பதற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கக்கூடிய முயற்சிகளுக்கென்று கசப்பான ஒரு நீண்ட வரலாறே இருக்கிறது. ஆனால், இந்தியாவின் தலையீட்டையடுத்து சமாதான உடன்படிக்கையின் விளைவாக கொண்டுவரப்பட்ட மாகாணசபைகள் முறை மாத்திரமே அரைகுறையாகவேனும் நடைமுறைப்படுத்தப்படக்கூடிய ஒன்றாக இருந்து வருகிறது.இந்தியாவின் நெருக்குதல் இல்லாவிட்டால் இது சாத்தியமாகியிருக்காது.
அவ்வாறென்றாலும் கூட மாகாணசபைகளுக்குச் சட்டப்படி உரித்தான முக்கியமான அதிகாரங்களை கொழும்பு அரசாங்கங்கள் இன்னமும் வழங்காமலேயே இருந்துவருகின்றன. அந்த அதிகாரங்களை வழங்கக்கூடியதாக கொழும்பை வழிக்குக் கொண்டுவர இந்தியா முயற்சிக்க அக்கறைப்படாத சூழ்நிலை தோற்றுவிக்கப்பட்டமைசிறுபான்மை இனத்தவர்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய தீர்வொன்றை விரும்பாத சக்திகளுக்கு வாய்ப்பாகப் போய்விட்டது.
இத்தகைய சூழ்நிலையில் சிங்கள அரசியல் சமுதாயம் தானாக இணங்கி இனப்பிரச்சினைக்கு உருப்படியான தீர்வொன்றைக் காண்பதற்கு முன்வருமென்று எவ்வாறு எதிர்பார்க்கமுடியும்? இந்தியாவின் நெருக்குதலுக்குப் பணிந்தே ஜெயவர்தன உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார் என்றபோதிலும், தனக்கு அதனால் ஏற்பட்ட அரசியல் பின்னைடைவை நாளடைவில் ஒரு அனுகூலமாக மாற்றக்கூடிய அரசியல் சூழ்ச்சித்திறம் அவரிடம் இருந்தது.
இலங்கைப் பிரச்சினையில் தமிழர்களின் சார்பில் இந்தியா தீவிரமாகத் தலையீடு செய்துவந்த போக்கை மாற்றியமைப்பதில் அவர் வெற்றி கண்டார் என்றுதான் சொல்லவேண்டும். அவ்வாறாக அமைவதற்கு தமிழர் தரப்பு சமாதான உடன்படிக்கையைக் கையாண்ட அணுகுமுறைகள் செய்திருக்கக்கூடிய “பங்களிப்புகள்’ குறித்து பல்வேறு வகையான விமர்சனங்கள் இருக்கின்றன. அவற்றை ராமகிருஷ்ணன் தனது நூலில் பல இடங்களில் சுட்டிக்காட்டத் தவறவில்லை.எது எவ்வாறிருந்தாலும் சமாதான உடன்படிக்கை தொடர்பில் அவர் எழுதிய இந்த நூல் உடன்படிக்கைதந்திருக்கும் படிப்பினைகள் தொடர்பில் பரந்த விவாதத்தைத் மூளவைக்கக்கூடிய ஆற்றலைக் கொண்டிருக்கிறது.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு கடந்த காலப் படிப்பினைகளின் அடிப்படையில் உகந்ததொரு அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்ற தனது மானசீகமான விருப்பத்தை ராமகிருஷ்ணன் நூலின் இறுதியில் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார். 13ஆவது திருத்தத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதன் மூலமாக தீர்வொன்றை நோக்கி பயனுறுதியுடைய முறையில் நகர முடியும் என்பது அவரது நம்பிக்கையாக இருக்கிறது.
இலங்கையின் பிரபலமான அரசியல் விஞ்ஞானப் பேராசிரியரான ஜெயதேவ உயன்கொட சமாதான உடன்படிக்கையின் மூன்று தசாப்த நிறைவை முன்னிட்டு கடந்த வருட நடுப்பகுதியில் ‘ த இந்து’ வில் எழுதிய கட்டுரையொன்றில் வெளிப்படுத்திய பொருள் பொதிந்த கருத்தொன்றை இச் சந்தர்ப்பத்தில் நினைவு படுத்துவது மிகவும் பொருத்தமானதாகும்.
” உடன்படிக்கை இலங்கையினதும் இந்தியாவினதும் வரலாறுகளின் அங்கமாகிவிட்டது.ஆனால்,உடன்படிக்கைக்குப் பிறகு இலங்கையின் அரசியல் மாறியிருக்கிறதா என்ற கேள்விக்கு ஆம் என்பதும் இல்லை என்பதுமே பதிலாக இருக்கும்.”
THANKS: tamilenews.com