உள்ளூர் இழுவை படகுகளை தடை செய்வது தொடர்பாக 3 மாதங்களுக்குள் தீர்மானம்! டக்ளஸ் - சுமந்திரன் இடையில் கருத்து பகிர்வு..
நாரா நிறுவனத்தின் அறிக்கையுடன், 2017ம் ஆண்டுக்கான சட்டத்தை மீளாய்வு செய்து 3 மாதங்களில் உள்ளூர் இழுவை படகுகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக தீர்மானிக்கலாம். என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியிருக்கின்றார்.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் உள்ளூர் இழுவை படகுகளுக்கான கட்டுப்பாடுகள் தொடர்பாக பேசப்பட்டபோதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
2017ம் ஆண்டு இழுவைப்படகிற்கான சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனாலும் குறித்த சட்டத்தை நடைமுறைப்படுத்தாது கிடப்பில்போடுமாறு கடல் தொழில் திணைக்களத்திற்கு கூறப்பட்டுள்ளது. அதனால் பலர் பாதிக்கப்படுவார்கள் என்பதனால் அன்றைய ஆட்சியிலேயே அது நடந்துள்ளது.
தற்பொழுது அந்த பிரச்சினை மீண்டும் எழுந்துள்ளது. இது தொடர்பில் நாரா நிறுவனத்திடம் ஆய்வு ஒன்று கேட்டுள்ளோம். ஏற்கனவே கடந்த ஆட்சியில் நாரா நிறுவனத்தினால் பல இடங்கள் அடையாளம் காட்டப்பட்டு அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.
அங்கு தற்காலிகமாக தொழில் செய்வதற்கு நிலங்கள் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. இந்த நிலைமையில் 2017ம் ஆண்டு சட்டத்தை மீளாய்வு செய்து நாராவின் அறிக்கையையும் பெற்று இரண்டு மூன்று மாதங்களிற்குள் அதற்கு ஒரு முடிவுக்கு வரலாம் என்று நினைக்கின்றேன் என்றார்.
இதன்போது கருத்து தொிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறுகையில், 2017ம் ஆண்டு சட்டம் கொண்டுவந்து தரப்படும்போதே விஞ்ஞான ரீதியாக அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் விசை குறைந்த மற்றும் அளவில் மட்டுப்பட்டுத்தப்பட்ட படகுகள் பயன்பாடு தொடர்பில்
பாராளுமன்றத்தில் தாம் குறிப்பிட்டதாக கூறியதுடன், ஆனால் அதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவும், அந்த முறையில் தொழிலினை செய்யலாம்.
மிக அடிமட்டம்வரை புாகாத வகையில் தொழிலை செய்தால் அடிமட்டத்தில் பாதிப்புக்கள் இல்லை. அதற்கு முறையான விடயங்களை கையாண்டால் மேற்கொள்ள முடியும்.
அதற்கான அனுமதி வழங்கப்படாதவிடத்து அது சட்டவிரோத தொழிலாகவே அமையும். அதனை செய்ய முடியுமாக இருந்தால் விரைவுபடுத்த வேண்டும்.
இல்லையேல் அது சட்டவிரோதமனதாகவே இருக்கும். இதேவேளை உள்ளுர் இழுவைப் படகுகளினாலேயே இங்குள்ள மீனவர்கள் தற்பொழுது பாதிக்கப்படுகின்றார்கள்.
மீனவர்களின் வலைகளை அழித்தல் உள்ளிட்ட வேலைகளை அவர்கள் செய்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.