மாணவர்களுக்கிடையில் கோஷ்டி மோதல்..! பின்னணியில் போதைப் பொருள் வியாபாரிகளா? மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஆராய்வு..
பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடக்கும் குழு மோதல்களின் பின்னணியில் போதைப் பொருள் வியாபாரிகள் இருக்கலாம். எனவும், மாணவர் சமூகத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். எனவும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் மாணவர்கள் மத்தியில் குழு மோதல்கள் இடம்பெற்றுவரும் நிலையில், அது தொடர்பான ஆய்வுகள் இடம்பெற்றுவருவதாக மாவட்டச் செயலர் திருமதி ரூபாவதி கேதீஸ்வரன் கூறியுள்ளார். குறித்த விடயம் தொடர்பாக சபையில் ஆராயப்பட்டிருக்கின்றது.
நகரில் உள்ள பிரபல பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் இவ்வாறு குழுக்களாக மாணவர்கள் கூடுவதாகவும், மோதல்கள் இடம்பெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது. மாலைநேரத்தில் பிரத்தியேக வகுப்புக்களிற்கு செல்லும் மாணவர்கள் இவ்வாறு ஒன்று கூடுவதாகவும்,
இதில் அதிகளவில் பாடசாலை இடைவிலகல் மாணவர்களு ஈடுபட்டுள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. இதனை தடுப்பதற்கான பல்வேறு கள ஆய்வுகள் இடம்பெற்றுள்ளதாக சபையில் இதன்போது தெரிவிக்கப்பட்டது. இவ்வாறான மாணவர்களின் பெற்றோர் தமது கௌரவத்திற்காக மறைக்க விரும்புவதாகவும்,
ஏற்பட்ட சேதங்களிற்கான செலவீனங்களை பொறுப்பேற்று குடும்ப கௌரவத்திற்காக தகவல் வெளியே செல்லவிடாது தடுப்பாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் அதனை தடுப்பதற்கு பொலிசார் மற்றம் சிறுவர் சார் விடயங்களை கையாளும் உத்தியோகத்தர்கள்
பாடசாலை சமூகத்துடன் இணைந்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. இதேவேளை, பாடசாலை இடைவிலகல் மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் பெற்றோரை அழைத்து முதல் கட்டமாக விழிப்புணர்வு செய்வது தொடர்பாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, போதைபொருட்கள் யாழ்ப்பாணத்தில் அதிக பயன்பாட்டில் உள்ளதாகவும், சுண்டிக்குளம், வடமராட்சி கிழக்கு ஊடாக கிளிநொச்சிக்கு கடத்தப்பட்டு வியாபாரம் இடம்பெறுவதாகவும் பொலிசார் தெரிவித்தனர். அதனை கட்டுப்படுத்துவதற்கு இரு வேறு குழுக்கள் நியமிக்கப்பட்டு
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக மீன சங்கங்களுடன் பேசி அவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும், அதற்கான ஏற்பாடுகளை தான் செய்யவுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்திருந்தார்.