சீ.வி.விக்னேஸ்வரனுக்கு அனுபவம் போதாதாம்..! கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுகிறார்..

ஆசிரியர் - Editor I
சீ.வி.விக்னேஸ்வரனுக்கு அனுபவம் போதாதாம்..! கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுகிறார்..

கெட்டவர்கள், பொய் சொல்லத் தெரிந்தவர்கள், படித்தவர்கள் ஏமாற்றத் தெரிந்தவர்கள் இப்படிப்பட்ட அனுபவங்கள் விக்னேஸ்வரனுக்கு இன்னும்போதாது என அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 

பதின்மூன்றாம் திருத்தம் தொடர்பில் இந்தியாவுக்கு அழுத்தத்தை கொடுப்போம் என கூடிய தமிழ் கட்சிகளில் விக்னேஸ்வரனும் பங்கெடுத்திருந்தார். அதன்பின் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது உண்மையை அவரே தன் வாயால் போட்டு உடைத்துவிட்டார்.

இலங்கையில் இந்தியாவுக்கு இருக்கும் ஒரே பிடி 13வது அரசியல் அமைப்பு அதனை நாம் நீக்குவதற்கு அனுமதிக்க முடியாது என அவரே வெளிப்படையாக கூறியிருந்தார். புதிய அரசியலமைப்பு வேண்டாம் இருக்கிற 13 ஐ பாதுகாப்போம் என்ற நிலைப்பாட்டில் அவர் இருக்கிறார் என எமக்குத் தெளிவாக விளங்குகிறது.

மனோ கணேசன் மற்றும் ஹக்கீம் ஒற்றையாட்சியின் கீழ் செயற்படுபவர்கள் அவர்களின் அரசியல் வேறு, தமிழ் மக்களுடைய அரசியல் வேறு அதை அவர்கள் தெளிவாக விளங்கி இருப்பார்கள். ஆனால் 13 ஐ வலியுறுத்தும் கூட்டத்தில் அவர்கள் பங்கேற்றமை எமக்குக் கவலை அளிக்கிறது.

நான் பாதுகாப்பு அமைச்சின் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் ஒற்றை ஆட்சி தொடர்பில் தெளிவாக கூறியபோது மனோ கனேசன் என்னைப் பாராட்டினார். நாங்கள் தெற்கில் சிங்களவர்களோடு சேர்ந்து அரசியல் செய்கிறவர்கள் இதைப்பற்றி பேச முடியாது நீங்கள் தெளிவாகப் பேசியது நல்லது என்றார்.

அதேபோன்று ஹக்கீம் முஸ்லிம்களின் பெருந்தலைவர் அஸ்ரப்புக்கு பின்னர் ஆளுமை உள்ள தலைவராக செயற்பட்டு வருகிறார். தற்போதைய அரசினால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அதனை உணர்ந்து தமிழ் மக்கள் விடயத்தில் செயற்படுவார் என நம்புகிறேன்.

தமிழ் மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் வலி இருக்கலாம் அதனை நாம் பேசித் தீர்வு காண வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் கூட வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் ஆக இருக்க வேண்டும் என்றால் தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமை அவசியம் என்று அன்றே கூறினார்.

ஆகவே 13வது திருத்தம் முஸ்லீம்களையும் தமிழ் மக்களையும் ஒற்றையாட்சியின் கீழ் வாழ்வதற்கான சூழலை உருவாக்கும் என்பதை இரு தலைவர்களும் உணர்ந்து செயற்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

மூத்த அதிகாரிகள் இளங்கோவன் - செந்தில்நந்தனன் இடமாற்றத்தில் நடந்தது என்ன? (ரிப்போர்ட்)

மேலும் சங்கதிக்கு