18 ஆண்டுகளுக்குப் பின் வீரப்பன் விடுதலை
யானைத் தந்தம் கடத்தல் வழக்கில் 18 ஆண்டுகளுக்குப் பின் வீரப்பனை விடுதலை செய்து சத்தியமங்கலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனக்கோட்டம் கொண்டப்பநாயக்கன்பாளையம் வனப்பகுதியில் உள்ள பில்பாளி என்ற இடத்தில் யானைகளைச் சுட்டுக்கொன்று 12 தந்தங்களைக் கடத்தியதாக, புளியங்கோம்பையைச் சேர்ந்த ஆறுமுகம், பெரியகுளத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், சண்முகம் (45), ஜவகர் (50), ராஜேந்திரன் (42) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுடன் சந்தன கடத்தல் வீரப்பன், வீரப்பன் கூட்டாளியான சந்திரகவுடா ஆகிய 7 பேர் மீதும் கடந்த 2000வது ஆண்டில் வனத்துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கு சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 18 ஆண்டுகளாக நடந்து வந்தது. வீரப்பன், சந்திரகவுடா மற்றும் பெரியகுளத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் ஆகியோர் ஏற்கெனவே இறந்துவிட்ட இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இவ்வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.
தகுந்த ஆதாரத்துடன் குற்றத்தை நிரூபிக்க வனத்துறையினர் தவறிவிட்டதாகக் கூறி, புளியங்கோம்பை ஆறுமுகத்தை தவிர மற்ற 6 பேரும் விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பளிக்கப்பட்டது. புளியங்கோம்பை ஆறுமுகம் வழக்கில் ஆஜராகாததால், அவர் மீது மட்டும் தொடர்ந்து வழக்கு நடைபெறும்.