வெடுக்குநாறிமலை - ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விடயத்தில் இந்துக்கள் பொறுமையாக இருக்கவேண்டுமாம்!
வெடுக்குநாறி மலை - ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடுகள் நடத்தும் விடயத்தில் இந்து மக்கள் பொறுமையாக இருக்கவேண்டும். என இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க நாடாளுமன்றில் கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (9 ) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின்போது நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் வெடுக்கு நாறிமலையில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த திருவிழாவை கடந்த இரண்டு ஆண்டுகளாக தொல்பொருள் திணைக்களம் நடத்த விடாமல் தடைசெய்துள்ளமை தொடர்பான கேள்வியை எழுப்பினார்.
இதற்குப் பதிலளிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில், நாம் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அவர்களின் வழிபாட்டு உரிமைகள் பறிக்கும் நோக்கமும் எமக்கில்லை.
ஆனால் தொல்பொருள் இடங்கள் பாதுகாக்கப்படவேண்டும். அதேவேளை, ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழிபாடுகள் தொடர்பில் வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது.
எனவே, அந்த வழக்கு முடியும் வரை இந்துக்கள் பொறுமைக்காக்க வேண்டும். இலங்கையில் உள்ள தொல்பொருள் பகுதிகளை பாதுகாக்கும் உரிமை எம் அனைவருக்கும் உள்ளது.
அதனை தமிழ் எம்.பிக்களும் விளங்கிக்கொள்ளவேண்டும். ஆகவே நாம் பொறுமையாக இந்த விடயங்களை கையாள்வோம் என்றார்.