பொலிஸார் மீது தாக்குதல் நடத்திவிட்டு கொழும்புக்கு தப்பி ஓடி தலைமறைவாக இருந்த 6 ரவுடிகள் கைது..!
கிளிநொச்சி - தர்மபுரம் பகுதியில் பொலிஸார் மீது தாக்குதல் நடாத்தி பொலிஸ் அதிகாரி ஒருவரை காயப்படுத்திவிட்டு தப்பி ஓடி கொழும்பில் தலைமறைவாக இருந்த 6 ரவுடிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி தர்மபுரம் பிறமந்தாறு பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை சமரசம் செய்யச் சென்ற தர்மபுரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவை சந்தேகநபர்கள் தாக்கியுள்ளனர்.
இதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்ய பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில், ராஜகிரியவில் கட்டட நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த ஆறு பேர் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று (26) நுகேகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.