தாயாருடன் குளிக்கச் சென்றிருந்த 4 வயது சிறுவன் நீரிழ் மூழ்கி உயிரிழப்பு..! கொரோனா தொற்றும் உறுதி..
தாயாருடன் குளத்தில் குளிக்கச் சென்றிருந்த நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்த 4 வயதான சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
குறித்த சம்பவம் வவுனியா - பாவற்குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,
வவுனியா, சூடுவெந்தபுலவு பகுதியில் வசித்துவரும் தாய் ஒருவர் தனது பிள்ளைகளுடன் பாவற்குளம் குளத்திற்கு நீராடச் சென்றுள்ளார்.
இதன்போது 4 வயது சிறுவனை குளத்தில் நீராட விட்டு விட்டு தாய் கரைக்கு வந்து திரும்பி குளத்திற்குள் சென்ற நீராடிக் கொண்டிருந்த சிறுவனை காணவில்லை.
இதனையடுத்து தாயார் அங்கு நின்றவர்கள் மற்றும் ஊரவரை அழைத்து சிறுவனை தேடிய போது சிறுவன் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டார்.
உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் சிறுவன் மரணமடைந்துள்ளார். வவுனியா, சூடுவெந்தபுலவு பகுதியைச் சேர்ந்த அம்ஜத் என்ற 4 வயது சிறுவனே மரணமடைந்தவராவார்.
இது தொடர்பில் உளுக்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, வவுனியா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில்
மரணமடைந்த சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி உடலத்தை அடக்கம் செய்யப்படவுள்ளது.