SuperTopAds

ஒற்றையாட்சியை ஒழித்து பல்தேசங்கள் கொண்ட நாடு என்பதனை ஏற்று அங்கீகரியுங்கள்

ஆசிரியர் - Admin
ஒற்றையாட்சியை ஒழித்து பல்தேசங்கள் கொண்ட நாடு என்பதனை ஏற்று அங்கீகரியுங்கள்

சிங்கள பௌத்தத் தீவு என்ற  மனோபாவமும் ஒற்றையாட்சி முறைமையும் கடந்த 74 வருடங்களாக நாட்டை பேரழிவுக்குள்ளேயே தள்ளி வந்திருக்கிறது.  ஆகவே இப்போதாவது உங்கள் பாதைகளை சீர்செய்துகொள்ளுங்கள். சிறிலங்கா தனது ஒற்றையாட்சிக் கட்டமைப்பை மாற்றி மீளுருவாக்கம் செய்யவேண்டும்.   இந்த இலங்கைத்தீவு  பல்தேசமுடைய நாடு என்பதை ஏற்று அதை அங்கீகரியுங்கள். அதன் மூலம் இந்த நாடின் ஒவ்வொரு குடிமகனும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

மாறாக  இலங்கைத்தீவு சிங்கள பௌத்தர்களுக்கு   மட்டுமே உரித்தானது என்கிற சிந்தனைப்போக்கில் ஒற்றையாட்சியை பிடித்து தொங்கிக்கொண்டிருந்தாபல் அழிவுதான் மிஞ்சும். தமிழர்களை அழிப்பதற்காக நீங்கள் வலிந்து உருவாக்கிய   பூகோள அரசியல் போட்டியின் களயதார்த்தங்களின் விளைவாகஇ உலகின் பலம் பொருந்திய சக்தியொன்றுஇ சிறிலங்கா இனிமேலும் ஒரு தனி அலகாக கருதப்பட தேவையில்லை எனும் முடிவுக்கு வரக்கூடும்.

 கடந்த 19-11-2021 திகதியன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் வலியுறுத்தினார். அவரது உரையின் தமிழாக்கம் இங்கு தரப்பட்டுள்ளது.  

அவைக்குத் தலைமை தாங்கும் கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய ) அவரகளே!

இந்த அவையில் மிகவும் மதிக்கப்படுபவரும் இந்த அவையில் தொடர்ச்சியாக அறிவுபூர்வமான கருத்துகளை முன்வைத்துவரும் தாங்கள் இந்த அவைக்குத் தலைமை தாங்கும் சந்தற்பத்தில் உரையாற்ற இன்று சந்தர்ப்பம் கிடைத்தமையையிட்டு நான் பெருமையடைகிறேன்.

கோத்தாபாய அரசு, கடந்த வருடம் தமது முதலாவது வரவுசெல்வுத்திட்டத்தை முன்வைத்தபோது ,  35 வருடகால போரினால் மிகவும் பாதிப்படைந்த, முழுமையாக அழிக்கப்பட்ட பிரதேசமான வடக்கு கிழக்கு பிராந்தியத்தை, நாட்டின் ஏனையபகுதிகளுடன் ஒரே தட்டில் வைத்து ஒப்பிடமுடியாது, ஒப்பிடவும் கூடாது எனநான் கூறியிருந்தேன். வடக்கு கிழக்கு மக்களின் பொருளாதாரம் என்பது நாட்டின் ஏனைய பகுதிகளோடு ஒப்பிடுகையில் முதலீடுகளில் மற்றும் பலவழிகளில் 35 வருடங்கள் பின்னதள்ளப்பட்டிருக்கிறது.

இந்த பின்புலத்தில், வெறுமனே யுத்தம் முடிவடைந்து விட்டது என்பதற்காக, பொருளாதாரத்தில் 35 வருடங்கள்பிந்தள்ளப்பட்ட வடக்கு கிழக்கு பிராந்தியத்தை நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒரே தட்டில் வைத்துஒப்பிடுவது என்பது, அந்த பகுதிக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் பாதகங்களை மேலும் தொடர்ச்சியாக நீடித்துச் செல்வதாகவே அமையும். நீங்கள் ஏற்கனவே அவர்களின் நிலமையை  பாதாளத்திற்குள் தள்ளி இருக்கிறீர்கள்.

அப்படிப்பட்ட நிலையில் அவர்கள் கீழே வீழ்த்தபப்ட்டு இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொண்டு அவர்களிடம் எஞ்சி இருப்பதை முதலில் பாதுகாக்க வழிவகை செய்து, அவர்களது பொருளதாரத்தை வலுப்படுத்தக்க்கூடிய  திட்டங்களை முன்வைத்து படிப்படியாக அவர்கள் நாட்டின் ஏனைய பகுதிகளுடன் சமமாக போட்டியிடக் கூடியநிலைமையையே உண்மையில் உருவாக்கியிருக்க வேண்டும்.

ஆனால், அப்படிப்பட்ட ஒரு அணுகுமுறையை கையாளாது, தொடர்ச்சியான போரினால் அந்த மக்கள் 35 வருடங்கள் பிந்தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதை  சிறிதளவும் கருத்திலெடுக்காது, அவர்களையும் சமனாக வைத்து நாட்டின் ஏனைய பகுதிகளுடன் பொருளாதாரத்தில் போட்டியிட தள்ளுவதன் மூலம், அந்த மக்களின் வறுமையையும் பொருளாதார்த்தில் பின்தங்கிய நிலையை  வேண்டுமென்றே மேலும் பாதாளத்திற்குக் கொண்டுசெல்கிறீர்கள்.

அந்த மக்களின் பொருளாதார்த்தை வலுப்படுத்தி முதலில் அவர்களை நிலைப்படுத்த்தும் திட்டங்களிற்குபதிலாக, நாட்டின் ஏனைய பகுதியினர் வந்து வடக்கு கிழக்கு மக்களிடம் எஞ்சியிருக்க்கும் வளங்களையும் அள்ளிச் செல்வதற்கும் அந்த பகுதியும் பொருளாதாரத்தை கையகப்படுத்துவதற்கும் வசதியாக வீதிகளையும்  அதற்கான  திட்டங்களையும் மட்டுமே அமைக்கிறீர்கள். எம்முடையதையெல்லாம் எமக்குள்ளேயே பொத்திப் பாதுகாக்கவேண்டுமென்றோ பிறருடன் எதனையும் பகிரக்கூடாதென்றோ சொல்பவன் அல்ல நான். ஆனால் நாட்டின் பிரதேசங்களும் மக்களும் ஒரே மாதிரியாக கவனிக்கப்படாது ஒரு பகுதி மக்களை நலிவடையச் செய்யப்பட்டுள்ள சூழ்நிலையிலே, அந்த நலிவடைந்த மக்களிடம் எஞ்சியிருப்பதையாவது பாதுகாக்கவேண்டுமெனில் அப்படியான ஒரு செயல்திட்டத்தையே நாம் கருத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது. 

ஆனால் கடந்த வருட வரவுசெலவுத்திட்டம் அதனை செய்திருக்கவில்லை. இந்த வருட வரவு செலவுத்திட்டம் இந்த விடயம் குறித்து எதையும் கருத்திலெடுக்காது முன்னைய வருடத்தைவிட இன்னமும் கீழே சென்றிருக்கிறது.
இது குறித்து அரசு சொல்லக்கூடிய ஒரே சமாளிப்பு கோவிட் தொற்றுக்கரணமாக முழு நாட்டின் அனைத்துப் பகுதிகளும் பாதிப்படைந்து முழு நாட்டின் பொருளாதாரமும் நலிவடைந்திருக்கிறது என்பதாகும். ஆனால் நீங்கள் இந்த பொருளாதார பாதிப்பு விடயத்தில் அப்படி ஒப்பிடவே  முடியாது.

உண்மையில் கோவிட் நிலமையினால் வடக்கு கிழக்கின் நிலமை ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும் போது ஆகக் குறைந்தது இன்னமும் பத்து மடங்கிற்கு மேல் மோசமானது என்பது தான் யதார்த்தம். ஆனால் இந்த அரசு அது குறித்து கிஞ்சித்தும் கவனமெடுக்கவில்லை. அரசதரப்பில் இருந்து இது குறித்து ஒரு சிறு குரலேனும் ஒலித்ததாக தெரியவில்லை. மாறாக வடக்கு கிழக்கு மக்களின் பொருளாதார அத்திவாரத்தையே அழிக்கின்ற வேலைத்திட்டங்களையே சிறிலங்கா அரசு கொண்டு செல்லுகிறது. வடக்கு கிழக்கு மக்களின் பொருளாதாரத்தின் மூன்று தூண்களாக மீன்பிடியையும் விவசாயத்தையும் வர்த்தகத்தையும் குறிப்பிடலாம். இதில் முக்கியமாக மீன்பிடித்த் தொழிலை திட்டமிட்ட முறையிலே கட்டமைக்கப்பட்ட வகையில் தொடர்ச்சியாக அழித்து அவர்களின் வாழ்வாதார்த்தை சிதைக்கிறது சிறிலங்கா அரசு.

வடக்கு கிழக்கு கடற்பரப்புக்குள் வேறுபகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக நுழைந்து, வடக்கு கிழக்கு மீனவர்களின் மீன்பிடி வலைகளையும் ஏனைய உடைமைகளையும் அழிப்பதோடு தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளில்  மீன்பிடித் தொழிலை செய்யும் மீனவர்களை ஒருவகையில் பாதுகாக்கின்ற வகையிலேயே சிறிலங்கா கடற்படை செயற்பட்டுவருகின்றது. அதுமட்டுமல்லாது வெளிநாட்டு மீனவர்களை, குறிப்பாக இந்திய மீனவர்களை வடக்கு கிழக்கு கடற்பகுதிக்குள் உள்நுழைந்து   வடக்கு கிழக்கு மீனவர்களின் உடமைகளை அழித்து தடைசெய்யப்பட்ட முறைகளில் மீன்பிடித்தொழில் செய்வதை வேண்டுமென்றே சிறிலங்கா கடற்படை  அனுமதித்து வருகிறது.

இது குறித்து நானும் என் சக பாராளுமன்ற உறுப்பினர் திரு செல்வராஜா கஜேந்திரன் அவர்களும் மற்றும் வடக்கு கிழக்கை சேர்ந்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் பலதடவை இந்த சபையின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தோம். ஆனால் அரசு எந்தவொரு நடவடிக்கையையும் எடுத்திருக்கவில்லை.

கடந்த 35 வருட போரின் போது எமது மக்களின் மீன்பிடித்தொழிலை தடைசெய்து வைத்திருந்தீர்கள். இப்போது போர் முடிவடைந்திருக்கிற நிலமையில், அந்த 35 வருடங்களுக்கு முன்னரான பழைமையான முறைகளிலேயே தமது மீன்பிடி தொழிலை மீள ஆரம்பிக்க முயலுகிற எமது பிரதேச மீனவர்களை, அந்தப் பிரதேசத்துக்குள் அத்துமீறி பிரவேசித்து, நவீன மற்றும் தடை செய்யப்பட்ட சட்டவிரோத மீன்பிடி முறைகள் மூலம் மீன்வளத்தை சுரண்டி அது மட்டுமல்லாது எமது மீனவர்களின் உடமைகளை சேதப்படுத்தி அழிக்கும்  வேறுபிரதேச மீனவர்களோடு போட்டியிட நிர்ப்பந்திக்கிறீர்கள். இது எவ்வகையில் நியாயமானது ? அந்த மீனவர்களால் தமது வாழ்வாதாரத்தை எப்படி கொண்டுசெல்லமுடியும்?

இதே நிலமைதான் எமது விவசாயத்துக்கும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. போர் நடந்த காலத்தில் எமது மக்களின் வாழ்விடத்தில் இருந்தும் விவசாய நிலத்தில் இருந்தும் எமது மக்களை இராணுவம் மூலம் விரட்டியடித்தீர்கள், இப்போது மக்கள் வாழ்வின்றி, கவனிப்பின்றி அந்த இடங்கள் மரங்கள் வளர்ந்து நிற்கையில், நூற்றுக்கணக்கான ஏக்கர் அளவான எமது மக்களிற்கு சொந்தமான தனியார் நிலங்களை, அனுமதிப்பத்திரங்கள் உள்ள நிலங்களை  காடு என பெயர் சூட்டி வனவளத்துறை மூலம் சுவீகரிக்கிறீர்கள். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தபோது அவர் அது குறித்து கிஞ்சித்தும் கவனமெடுக்கவில்லை. மாறாக, உண்மையில் அரசுக்கு சொந்தமான அனுமதிப்பத்திர காணிகள் இருக்கின்ற சந்தர்ப்பங்களில், அவையெல்லாம் எல்லைக் கிராமங்களுக்கு வழங்கப்பட்டு, அங்கு வடகிழக்கை  சாராத பிறமாவட்ட மக்களை கொண்டுவந்து குடியமர்த்துகிறீர்கள்?. இதன் மூலம் திட்டமிட்ட முறையில் எமது வடக்கு கிழக்கு பிரதேசத்தில் மக்களின் குடிசனப்பரம்பலை செயற்கையாக மாற்றியமைக்கவே தொடர்ந்தும் முயல்கிறீர்கள். இது தான் களத்தில் நடக்கின்ற யதார்த்தம்.
ஆனால் இந்த யதார்த்தத்தையெல்லாம் நாம் வெளிக்கொண்டு வருகின்றபோது, இங்கு ஆளும் தரப்பில் இருப்பவர்கள் மட்டுமல்ல  ஏன் இப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருகின்ற முன்னாள் ஆளும் தரப்பினர் கூட எம்மை இனவாதிகள், குறுகிய இனவாத சிந்தனை கொண்டவர்கள் என நாமம் சூட்டி அவமதித்து தட்டிக்கழித்தனர். வடக்கு கிழக்கில் சிங்களவர்கள் வருவதை முற்றுமுழுதாக எதிர்ப்பவர்கள் என திரிபுபடுத்தினர்.


ஆனால் உண்மை அதுவல்ல. ஏனையபகுதி மக்களின் நன்மைக்காக வடக்கு கிழக்கு பகுதி மக்களை தொடர்ந்தும் எதுவவித உரிமையும் வரப்பிரசாதமுமற்ற இரண்டாம் தர குடிமக்களாக நடத்துவதையும் அதைபயன்படுத்தி ஏனைய பகுதி மக்கள் வந்து எமது பிரதேசத்தை கையகப்படுத்துவதையும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்றே நாம் கூறுகின்றோம்.ஆனால் அது தான் நடந்துகொண்டிருக்கிறது.


நாம் இதுகுறித்து இங்கு திரும்ப திரும்ப எடுத்துக்கூறியும், நாம் கூறுவதெல்லாம் வேண்டுமென்றே  பிழையாக அர்த்தப்படுத்தப்படுவதும், எதுவித தடைகளுமின்றி இத்தகைய செய்ற்பாடுகள்  தொடருகின்றமையும் இந்த அவையின் இனவாத செயற்திட்டத்தின் ஒரு அங்கமே என்பதை வெளிப்படுத்தி நிற்கிறது.
 
அடுத்து ஒற்றையாட்சி முறைமை குறித்து எமது நிலைப்பாட்டை பகிரவிரும்புகிறேன். சிறிலங்கா இன்று வீழ்ந்துகிடக்கின்ற மோசமான ( பொருளாதார ) நிலமைக்கு, சிறிலங்காகவுக்கு சுதந்திரம் கிடைத்த முதல் பத்து ஆண்டுகளை தவிர்த்து இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த அனைத்து தர்ப்பினருமே பொறுப்பேற்க வேண்டும் என இங்கு பேசிய அமைச்சர் டளஸ் அழகப்பெரும கூறியிருந்தார். அது உண்மையான கூற்று, அதை வெளிப்படையாக நேர்மையுடன் கௌரவ டலஸ் அழகப்பெரும ஒத்துகொண்டிருந்ததை நான் அவதானித்தேன். அதுதான் உண்மை. உண்மையில் இந்த நாடு கோவிட் பெருந்தொற்றினால் இந்த நெருக்கடிக்குள் வீழவில்லை. சிறிலங்காவுக்கு சுதந்திரம். கிடைத்த பத்து வருடங்களிலேயே இந்த வீழ்ச்சி ஆரம்பித்து விட்டது. அது உங்கள் அனைவராலுமேயே ஆரம்பித்தது.

இங்கு மாறி மாறி ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும், இந்த நாட்டில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவரும் குடிமக்களின் ஒரு பகுதியினரை உங்கள் எதிரிகளாக நீங்களே உருவகித்துக் கொண்டீர்கள்.  அவர்களின் அடையாளத்தையும் அவர்களையும் அழிப்பதே உங்களின் முழுமுதற் கடமையாக கொண்டு அற்ற்கேற்ப சட்டதிட்டங்களை உருவாக்கினீர்கள். அதன் மூலம் அவர்கள் இந்த நாட்டின் வடக்குக் கிழக்கு பகுதியை தனது வரலாற்று தாய்நிலமாக கோரமுடியாது எனும் நிலைக்கு அவர்களை தள்ளி அதன் மூலம் முழு இலங்கைத் தீவுமே சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமானது எனும் இலக்கை அடையும் திட்டத்தை முன்னெடுத்தீர்கள்.

அந்த இலக்கை அடைவதற்காக, சொந்த நாட்டின் ஒரு பகுதி மக்களை நீங்களே எதிரிகளாக்கி, அவர்களை கொன்றொழிப்பத்ற்காகவும் இந்த நாட்டை சிங்கள பௌத்த நாடு என மாற்றுபவர்களாகவும்  இறுதியில் இராணுவ இயந்திரத்தையும் பெரும் செலவில், மிக மிக பெரும் அரச செலவில் கட்டவிழ்த்து விட்டீர்கள். அதன்மூலம் அந்த இராணுவ யுத்ததின் இலக்கை நீங்கள் அடைந்திருக்கலாம். ஆனால் இன்று யுத்தம் முடிந்து 12 வருடங்கள் ஆகின்றது. இதுவரைக்கும் அதன்மூலம் நீங்கள் கண்டடைந்தது என்ன? இப்போது நீங்கள் குறைகூறி தப்பிக்கொள்வதற்கு இங்கு விடுதலைப் புலிகள் இல்லை. ஆனால் நீங்கள் சாதித்தது என்ன? எதனை அடைந்தீர்கள்?  ஆயுத மோதல் முடிவடைந்து ஐந்து ஆறு வருடங்களுக்கு மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்தபோதோ அல்லது  அதன் பின்னர் ரணில் - மைத்திரிபால சிரிசேன அரசு ஆட்சியில் இருந்த போதோ நீங்கள் எதனை சாதித்தீர்கள்? ஒவ்வொரு வருடமும் முந்தைய வருடத்தை விட மோசமானதாகவே அமைந்தது.  ஒவ்வொரு வருடங்களும் நீங்கள் கீழ்நோக்கியே சென்றீர்கள்.

இப்போது, இந்த கோவிட் பெருந்தொற்றினால் தலைகுப்புற வீழ்ந்து கிடக்கிறது இந்த நாடு. இப்போது அனைத்தையும் இழந்துவிட்டு, அடிமட்டத்தையும் சுரண்டிப்பார்க்க முற்பட்டிருக்கிறீர்கள். இந்த நிலமையில் கூட நீங்கள் கடந்து வந்த பாதையை திரும்பி பார்த்து திருத்திக்கொள்ள  நீங்கள் தயாரில்லை. இந்த மனோபாவமும் ஒற்றையாட்சி முறைமையும் கடந்த 74 வருடங்களாக நாட்டை பேரழிவுக்குள்ளேயே தள்ளி வந்திருக்கிறது, ஆக்வே, சிறிலங்கா தனது கட்டமைப்பை மாற்றி மீளுருவாக்கம் செய்யவேண்டும் என நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக்கொண்டிருந்தபோதும் நீங்கள் அதே ஒற்றையாட்சி முறைமையை கொண்டு சென்று நாட்டை தரைமட்டத்துக்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறீர்கள். இப்போதாவது உங்கள் பாதைகளை சீர்செய்துகொள்ளுங்கள், ஏற்கனவே அதல பாதாளத்தில் இந்த நாடு  விழுந்துகிடக்கிறது, இனியும் நீங்கள் இழப்பதற்கு எதுவுமில்லை. இந்த சந்தர்ப்பத்திலாவது நீங்கள் உங்கள் பாதைகளை சரிசெய்வது குறித்து சிந்தியுங்கள். இந்த இலங்கைத்தீவு  பல்தேசமுடைய நாடு என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள், அதை அங்கீகரியுங்கள், அதன் மூலம் இந்த நாடின் ஒவ்வொரு குடிமகனும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். அப்படி செய்தால் , தமிழ் தேசம், தனது  புலம்பெயர் தமிழ் உறவுகளை இந்த நாட்டில் முதலீடுகளை மேற்கொண்டு இந்த நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணை புரியுமாறு  கேட்க முடியும். ஆனால் நீங்கள் அதை செய்யப்போவது இல்லை.

இந்த இலங்கைத்தீவு சிங்கள பௌத்தர்களுக்கு   மட்டுமே உரித்தானது என்கிற சிந்தனைப்போக்கில் ஒற்றையாட்சியை பிடித்து தொங்கிக்கொண்டிருக்க போகிறீர்கள். அந்த சிந்தனை போக்கில் இருந்து கொண்டு தமிழர்களை அழித்தீர்கள், இப்போது முஸ்லிம்களுக்கு எதிராகவும் உங்கள் நடவடிக்கைகளை தொடங்கிவிட்டீர்கள். அது மட்டுமல்ல, உங்கள் சுயநல போக்கும் இந்த நாட்டை மேலும் அழிவுப்பாதையிலேயே தள்ளும், உங்கள்சொந்த இருப்பையையே அது அழிக்கத்தொடங்கியிருக்கிறது.


மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்தேனும் தமிழர்களை அழித்து  தமிழர்களுக்கு எதிரான போரை வெற்றி கொள்வதற்காக நீங்கள் உலகில் பலநாடுகளிடம் கடன்பட்டு, கடமைப்பட்டீர்கள். இன்று அந்த கடமைப்பாட்டுக்காக உங்கள் சொந்த நாட்டையே அந்த நாடுகளுக்கு விற்கதொடங்கியிருக்கிறீர்கள். அதன் மூலம் நீங்கள் வலிந்து உருவாக்கிய  இந்த பூகோள அரசியக் போட்டிக்கான களத்தினை சமாளிக்க,  குறித்த சக்தி மிக்க நாட்டுக்கு மட்டுமின்றி, இந்த பூகோள அரசியல் போட்டியின் மறுதரப்பினரான நாடுகளுக்கும் ஏன் வேறு சில நாடுகளுக்கும்  இந்த நாட்டை பாகம் பாகமாக விற்கவேண்டிய கடப்பாட்டுக்குள் உங்களை நீஙக்ளே தள்ளிவிட்டிருகிறீர்கள். இதை பார்க்க உங்களுக்கே வெட்கமாய் இல்லையா? இப்படியான ஒரு நாட்டில் உங்கள் பிள்ளைகளுக்கு எதிர்காலம் இருக்கிறதா நெஞ்சை தொட்டுபார்த்து நேர்மையுடன் சொல்லுங்கள்? இந்த நாட்டின் எந்த ஒரு குடிமகனும் தனக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் எப்படியாவது தன் பிள்ளைகளை நாட்டைவிட்டு வெளியேற்றி கல்விகற்க வேண்டும் என்றே நினைக்கூடிய நிலைக்கே இந்த நாடு இன்று வந்துநிற்கிறது. சிறிலங்காவுக்கு   சுதந்திரம் கிடைத்து 74 ஆண்டுகளில் நீங்கள் பெற்றுக்கொண்ட அடைவு இது தான் ! உண்மையில் இதை பார்க்க உங்களுக்கே வெட்கமாக இல்லையா ?
 
உண்மையில் இப்போதே இந்த நாட்டை தரை மட்டத்துக்கு கொண்டுவந்து விட்டீர்கள். ஆனால் இதே சிந்தனைப்போக்கிலும் இதே பாதையிலும் நீங்கள் தொடர்ந்தும் சென்றால், இன்னும்  அதல பாதாளத்துக்குள் நாட்டை அமிழ்த்தி விடுவீர்கள். அதுமட்டுமல்ல,  இந்த போக்கினால், நீங்கள் உங்கள் இலக்காக வரித்துக்கொண்டு செயற்பட்ட அந்த சிங்கள  பௌதத தேசம் எனும் கருதுகோளே சிதைந்து போகும் அளவுக்கு நீங்கள் அதலபதாளத்துக்குள் மூழ்கிவிடுவீர்கள். அந்த சிங்கள பௌத்த தேசத்தின் உடைவு இப்ப்போதே ஆரம்பித்து விட்டது என்பது தான் உண்மை. இங்கு உரையாற்றிய எதிர்த்தரப்பு மட்டுமல்ல அரசதரப்பு அங்கதவர்கள் கூட, கடவுச்சீட்டு பெற்று நாட்டைவிட்டு வெளியேறுவதற்காக மக்கள் வரிசையில் நிற்கிறார்கள் என கூறியிருந்தார்கள். யார் அவர்கள்,?, அங்கு வரிசையில் நிற்பவர்களுள் மிக பெரும்பாலனவர்கள் சிங்களவர்களேயன்றி தமிழர்கள் அல்ல.

இப்போதாவது மீள சிந்திக்க தலைப்படுங்கள். இந்த நாடு இந்த நிலையில் வீழ்ந்துகிடக்க காரணமான, கடந்த 74 வருடங்களாக நீங்கள் செய்து வரும் முட்டாள்தனத்துக்கு இனியாவது முற்றுப்புள்ளி வையுங்கள். இந்த நாடு பல தேசங்களை கொண்டது என்பதை அங்கீகரிக்க மறுத்தும் சமஷ்டி முறையான ஆட்சி தனியான நாட்டுக்கு வழிக்கும்  என்றும் நம்பிக்கொண்டு ஒற்றையாட்சியில் தொங்கிக்கொண்டு இருந்தீர்கள். ஆனால் அந்த ஒற்றையாட்சி முறைமைதான் இங்கு ஒரு தனி நாட்டுக்கான போராட்டத்தை உருவாக்கியது. உங்களின் அந்த ஒற்றையாட்சி முறைமைதான் இன்னொரு நடைமுறை அரசை இந்த தீவுக்குள் உருவாக்கியது.
 
தனிநாட்டை அல்லது அதற்கான தேவையை உருவாக்குவது ஒற்றையாட்சியோ அல்லது சமஷ்டியோ அல்ல. மாறாக, இந்த நாடு எம் அனைவருக்கும் சொந்தமானது, இது எங்களின் நாடு  என இந்த நாட்டின் மக்கள் அனைவரும் சந்தேகமின்றி உணரக்கூடியவகையில் அவர்களை நடத்துவது தான் தனிநாட்டுக்கான தேவையை இல்லாமல் ஒழிக்கும்.  ஆனால், நீங்கள் அதை செய்திருக்கவில்லை. மாறாக இது சிங்கள பௌத்த நாடு என்பதையே மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கொண்டிருக்கிறீர்கள். இப்படியான உங்களின் நடவடிக்கை மூலம்  ஒரு வேளை இந்த ஒற்றையாட்சி முறையை காலம் காலமாக பேணகூடியதாக இருக்கும், ஆனால்,  அதனால்,  இந்த நாடு ஒருபோதும் ஸ்திரநிலைக்கு வராமல் இருப்பதையும்  நீங்களே உறுதிப்படுத்திக்கொள்கிறீர்கள் என்பதை மனதில் வைத்திருங்கள். அப்படிப்பட்ட ஒற்றையாட்சியை தொடர்வதன்  மூலம் இந்த நாட்டின் சட்டபூர்வ அங்கீகாரம் என்பது தொடர்ந்தும் கேள்விக்குள்ளாக்கபட்டுக்கொண்டே இருக்கும் என்பதையும் மறவாதீர்கள்.
 
என்றோ ஒருநாள், இந்த பூகோள அரசியல் போட்டியின் களயதார்த்தங்களின் விளைவாக, உலகின் பலம் பொருந்திய சக்தியொன்று, சிறிலங்கா இனிமேலும் ஒரு தனி அலகாக கருதப்பட தேவையில்லை எனும் முடிவுக்கு வரக்கூடும். அப்படித்தான் உலகில் நாடுகள் பிரிவடைந்திருக்கிறது.  கடந்த 74 வருடங்களாக கொண்டு செல்லும் அழிவை நோக்கிய, நரகத்தை நோக்கிய பாதையையே  தொடர்ந்தும் முற்கொண்டு செல்லப்போகிறீர்களா என்பதை இந்த நாட்டின் 75 வீதமான மக்களாகிய நீங்களே உங்கள் தெரிவை எடுத்து கொள்ளுங்கள். 

யுத்தம் முடிந்து 12 வருடங்களுக்கு பின்னர் கூட இன்னமும் நாட்டையும் மக்களையும் மேலும் அதல பாதாளத்துக்குள் தள்ளப்போகிறீர்களா அல்லது இந்த நாட்டின் அனைத்து குடிமக்களும் சமனான உரித்துகளை அனுபவித்து இது எமது நாடு என பெருமையுடன் சொல்லக் கூடியவாறு  இந்த நாட்டினை அனவருமாக சேர்ந்து முன்னேற்றப்பதையில் செல்லகூடிய ஒரு புதிய அடித்தளத்தை நேர்மையாக இடப்போகிறீர்களா என்ப்தை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். முடிவு உங்களுடையது!