SuperTopAds

முன்னணியைக் கைப்பற்ற மணிவண்ணன் வியூகம்!

ஆசிரியர் - Editor I
முன்னணியைக் கைப்பற்ற மணிவண்ணன் வியூகம்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அதிருப்தியாளர்களை ஒன்றிணைத்து, யாழ்.  மாநகர மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.  தமிழ் தேசிய மக்கள் முன்னணியை கைப்பற்றும் முயற்சியின் ஒரு அங்கமாக இந்த சந்திப்பு நடப்பதாக கூறப்படுகிறது.

வவுனியா நகரில் உள்ள விடுதி ஒன்றில் நேற்றுமுன்தினம் காலை முதல் மாலை வரை இந்த கலந்துரையாடலில் இடம்பெற்றது.  தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் முக்கிய செயற்பாட்டாளர்களாக இருந்து, தற்போது அதிருப்தியுடன் ஒதுங்கியிருப்பவர்களே இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

கட்சியின் யாழ் மாவட்ட தற்போதைய அமைப்பாளர், மன்னார் மாவட்ட அமைப்பாளர், கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணி தலைவர், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு நிர்வாக குழு உறுப்பினர்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

வடக்கு கிழக்கிலுள்ள மாவட்டங்களில்- அம்பாறை தவிர்ந்து மற்ற அனைத்து மாவட்டங்களிலிருந்தும் தலா 3 பேர் வீதம் சந்திப்பில் கலந்து கொண்டனர்.  தமிழ் தேசிய மக்கள் முன்னணியென்ற பெயரை உரிமை கோருவது, கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்துவது, மாகாணசபை தேர்தலில் களமிறங்குவது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த சந்திப்பு விரிவான பத்திரிகை அறிக்கை வெளியிடப்படும் என்றும், முன்னணியின் முதலாவது மத்தியகுழு உறுப்பினர்களாக இருந்த 5 பேர் தற்போது தமது தரப்பில் இருப்பதாகவும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருவர் மாத்திரமே உள்ளதாகவும், இனி வரும் நாட்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பெயரிலேயே செயற்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் யாழ் மாநகர மேயருடன், மாநகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபன், நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கௌசல்யா, வவுனியா நகரசபையின் முன்னாள் உறுப்பினர் பி.யானுயன், இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.