ஜ.சி.சியின் மதிப்புமிக்க வீரர்களை பட்டியலில் இலங்கையின் ஹசரங்க, அசலங்க!! -இந்திய வீரர்களுக்கு இடமில்லை-
சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் (ஐ.சி.சி) அதிகாரப்பூர்வ ஆண்கள் ரி-20 உலகக் கிண்ண தொடரின் மிகவும் மதிப்புமிக்க வீரர்களை கொண்ட அணியை வெளியிட்டுள்ளது.
உலகெங்கிலும் உள்ள பல பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் வகையில் அந்த அணியின் தலைவராக பாபர் அசாம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மேலும் இத் தொடரில் மிகவும் மதிப்புமிக்க அணியில் ஆறு வெவ்வேறு அணிகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
இதன்படி கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலியா, ரன்னர்-அப் நியூசிலாந்து, அரையிறுதிக்கு வந்த இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை, தென்னாபிரிக்காவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் இந்த வரிசையில் இடம்பெற்றுள்ளனர்.
அவுஸ்திரேலிய அணியில் இருந்து, போட்டியின் ஆட்டநாயகனான டேவிட் வோர்னர், லெக் ஸ்பின்னர் ஆடம் ஜம்பா மற்றும் சீமர் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அணியின் விக்கெட் காப்பாளராக ஜோஸ் பட்லரும், தலைவராக பாகிஸ்தானின் பாபர் அசாமும் உள்ளனர்.
மேலும் நியூசிலாந்தின் இடது கை வேகப் பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் மற்றும் இலங்கை நட்சத்திரம் வனிந்து ஹசரங்க ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சரித் அசலங்க, ஐடன் மார்க்ராம், மொய்ன் அலி மற்றும் அன்ரிச் நார்ட்ஜே ஆகியோரும் பட்டியலில் உள்ளனர்.
இது தவிர பாகிஸ்தானின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி அணியின் 12 ஆவது வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த மதிப்புமிக்க அணியில் எந்த இந்திய கிரிக்கெட் வீரரும் உள்வாங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.