மாபெரும் நூல் கண்காட்சி!குடும்பத்துடன் பார்வையிட்ட யாழ்.இந்தியத் துணைத் தூதுவர்!
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வலி.தெற்குப் பிரதேச சபையின் சுன்னாகம் பொதுநூலகத்துடன் ‘எங்கட புத்தகங்கள்’ குழுமம் இணைந்து நடாத்திய “தொலைதூர வாசிப்பு” எனும் தொனிப் பொருளிலான மாபெரும் நூல் கண்காட்சி இன்று திங்கட்கிழமை (08.11.2021) பிற்பகல்-04.30 மணியுடன் நிறைவுபெற்றது.
இந்நிலையில் குறித்த கண்காட்சி தொடர்பில் ஊடகங்கள் ஊடாக அறிந்து யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07.11.2021) முற்பகல்-11 மணியளவில் தனது குடும்பத்தினருடன் சுன்னாகம் பொதுநூலகத்திற்குச் சென்றார்.
இந்நிலையில் சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக கண்காட்சியை மிகுந்த ஆர்வத்துடன் பார்வையிட்டார்.
இதன்போது மேற்படி கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஈழத்துச் சஞ்சிகைகளை ஆர்வத்துடன் பார்வையிட்ட அவர் ஈழத்திலிருந்து இவ்வளவு சஞ்சிகைகள் வெளியாகின்றதா? என ஏற்பாட்டாளர்களிடம் ஆச்சரியத்துடன் வினாவினார்.
சுன்னாகம் பொதுநூலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் சுன்னாகம் பிரதம நூலகர் திருமதி.ஜெயலட்சுமி சுதர்சனிடம் நேரடியாக கேட்டறிந்து கொண்ட யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் குறித்த கண்காட்சி தொடர்பான தனது அபிப்பிராயத்தையும் சுன்னாகம் பொதுநூலகத்தின் குறிப்பேட்டில் பதிவு செய்தார்.
அது மாத்திரமன்றி கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பல ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களையும், சஞ்சிகைகளையும் யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் உரிய பணம் செலுத்திக் கொள்வனவு செய்து சென்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.