பௌத்த சின்னங்கள் காணப்படும் இடமெல்லாம் சிங்கள மக்கள் வாழ்ந்த இடமல்ல..! ஆதியில் பௌத்தம் தமிழர்களின் பண்பாட்டு சின்னம் - புஸ்பரட்ணம்..

ஆசிரியர் - Editor I
பௌத்த சின்னங்கள் காணப்படும் இடமெல்லாம் சிங்கள மக்கள் வாழ்ந்த இடமல்ல..! ஆதியில் பௌத்தம் தமிழர்களின் பண்பாட்டு சின்னம் - புஸ்பரட்ணம்..

வெடுக்குநாறி மலையில் பௌத்த சின்னங்கள் காணப்படுமாக இருந்தாலும் அங்கு சிங்கள மக்கள் வாழ்ந்ததாக அர்த்தப்படாது.என கூறியிருக்கும் யாழ்.பல்கலைகழக தொல்லியல்துறை பேராசிரியர் ப.புஸ்பரட்ணம், அவ்வாறான அர்த்தப்படுத்தல் மிக தவறானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

வெடுக்குநாறி மலையில் பௌத்தவிகாரையின் சிதைவுகளே உள்ளது என தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அநுர மனதுங்க அண்மையில் வவுனியாவில் வைத்து ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

இவ்விடயம் தொடர்பாக யாழ். பல்கலைக்கழக தொல்லியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் கருத்து தொிவிக்கும்பொதே மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், 

ஆதியிலே பௌத்தம் என்பது தமிழர்களுக்கும் உரிய ஒரு பண்பாட்டு சின்னமாக தான் காணப்பட்டது. இவ்வாறே இந்து மதமும் விளங்கியது. ஆகவே இந்த வன்னி பிராந்தியத்தில் வெடுக்குநாறி மலையில் பௌத்த சின்னங்கள் காணப்படுமானால் 

அங்கு சிங்கள மக்கள் வாழ்ந்ததன் அடையாளமாக பார்ப்பது மிகவும் தவறான ஒரு கண்ணோட்டம். அவ்வாறு பார்க்க முடியாது. ஏனென்றால் இந்த பௌத்த மதம் இலங்கையில் மட்டுமல்லாமல் உலகிலே பல நாடுகளில் 

பல இனம், பல மொழி பேசுகின்ற மக்களிடையே பரவியதுண்டு. ஆகவே வெடுக்குநாறி மலையில் ஆதியிலே இந்துமதம் இருந்து பின்னர் அதிலே கணிசமான மக்கள் பௌத்தர்களாக மாறி 

பலர் இந்துக்களாக வாழ்ந்த காலகட்டத்திலே வன்னி பிராந்தியத்தில் தமிழ் பௌத்தமும் இருந்திருக்கலாம் என்பதிலே எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் பௌத்த சின்னங்களை வைத்துக்கொண்டு 

அது சிங்கள மக்களுக்குரியதென்றும், அதனாலே அவ் இடங்களில் சிங்கள மக்கள் வாழ்ந்தார்கள் எனவும் கூறுவது பொருத்தமானது இல்லை என்பது தான் என்னுடைய கருத்தாகும். இது இலங்கையிலுள்ள பல அறிஞர்களினதும் 

பொதுவான கருத்தாகும் .பௌத்த சிங்கள மக்கள் வாழாத இடங்களில் பௌத்த சின்னங்கள் காணப்படுமானால் அந்த இடங்களில் பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்ற தமிழரோடு தொடர்புபடுத்திதான் அதனை பார்க்க வேண்டும். 

பௌத்தம் சார்ந்த சின்னங்களை ஒரு வழிபாட்டுக்குரிய இடங்களாக மாற்றுவது பொருத்தமற்றது. மாறாக முன்னொரு காலத்தில் வன்னியிலே பௌத்த மதமும் இருந்ததென்ற ஒரு அடையாளமாக அதனை பாதுகாக்கலாமே ஒழிய 

அதனை ஒரு வழிபாட்டுக்குரிய இடமாக மாற்றுவது இன நல்லுறவை பாதிக்கின்ற ஒரு செயலாக தான் இருக்குமென்பது என்னுடைய கருத்து என அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு