வெள்ளத்தில் சிக்கியுள்ள 90 குடும்பங்கள்..! பாதையை சீரமைக்குமாறு மக்கள் கோரிக்கை, அனர்த்த முகாமைத்துவ பிரிவு துரித நடவடிக்கை..
கிளிநொச்சி - ஊற்றுப்புலம் வள்ளுவர் பண்ணையையும், நாவலர் பண்ணையையும் இணைக்கும் வீதியில் அமைந்துள்ள பாலத்தின் நிர்மான பணிகள் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் குறித்த வீதி ஊடான வாகன போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பதிலாக அமைக்கப்பட்ட வீதிக்கு மேலாக குளத்து நீர் தேங்கி நிற்பதால் வாகன போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவசர தேவையின் நிமித்தம் செல்பவர்கள், தொழிலிற்கு செல்பவர்கள் பாதிக்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, நோயாளர்களை அழைத்து செல்வதிலும்,
மாணவர்கள் பாடசாலை செல்வதிலும் பாரிய சவால் காணப்படுவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். வாகனங்களை மறுபுறத்தில் நிறுத்திவிட்டு நோயாளர்களை தூக்கியே
கடக்க வேண்டிய நிலை தற்போது உள்ளதாகவும், தொடர்ந்து மழை பெய்தால் முற்றாக போக்குவரத்து தடைப்பட்டு 90 குடும்பங்களும் தனியாக நீரில் சூழ்ந்த பிரதேசத்தில் சிக்கிக்கொள்ளும் அபாய நிலை காணப்படுவதாகவும்
மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.குறித்த வீதியானது புதுமுறிப்பு குளத்தின் அலைகரை பகுதியை ஊடறுத்து செய்வதால், தொடர்ந்தும் இந்த நிலை காணப்படும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்பொழுது 19 அடி கொள்ளவு கொண்ட புதுமுறிப்பு குளத்தின் நீர்மட்டம் 16 அடி 1 அங்குலமாக காணப்படுகின்றது. தொடர்ந்தும் நீர் வருகை காணப்படுவதால் நீர்மட்டம் அதிகரித்து போக்குவரத்து துண்டிக்கப்படும்
அபாய நிலை காணப்படுவதுடன், மக்கள் சிக்கிக் கொள்ளும் நிலையும் ஏற்படும்.இந்த நிலையில், உடனடியாக மாற்று நடவடிக்கை மேற்கொண்டு தருமாறு மக்கள் கோருகின்றனர்.
இதேவேளை மாற்று நடவடிக்கை மேற்கொண்டு மக்களுடைய போக்குவரத்தை சீர்ப்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.