2021 எல்.பி.எல் வீரர்களின் தெரிவுக்கான திகதி ஒத்திவைப்பு!!
2021 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்) ரி-20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர்களை தேர்வுசெய்வதன் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது எல்.பி.எல். போட்டிகளுக்கு வீரர்களை தெரிவுசெய்வதற்கான நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியத்தினால் தெரிவிக்கப்பட்டது.
இந் நிலையில் அது எதிர்வரும் நவம்பர் 9 ஆம் திகதி வரை ஒத்திவக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை காலத்தினால் பல உரிமையாளர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
போட்டியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து அணிகளின் உரிமையாளர்கள் அல்லது பயிற்சியாளர்களினால் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதன்படி, 300 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 300 உள்ளூர் வீரர்கள் என மொத்தம் 600 வீரர்கள் இந்த ஆண்டுக்கான போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட தகுதி பெற்றுள்ளனர்.
இது கடந்த ஆண்டை விட 165 வீரர்கள் அதிகம். ஒரு அணியில் 14 உள்ளூர் மற்றும் 06 வெளிநாட்டு வீரர்கள் உள்ளடங்கலாக 20 வீரர்கள் வரை தேர்ந்தெடுக்கப்படுவர்.
தேவைப்பட்டால் ஒரு அணி முந்தைய ஆண்டு அணியில் இருந்து 8 வீரர்களை (4 உள்ளூர் மற்றும் 4 வெளிநாட்டு வீரர்களை) தக்க வைத்துக் கொள்ளலாம், மீதமுள்ளவர்கள் வரவிருக்கும் ‘பிளேயர் டிராப்டில்’ இருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி தொடங்குவதற்கு திட்டமிடப்பட்ட லங்கா பிரிமியார் லீக்கின் முதல் சுற்று போட்டிகள் கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்திலும் இறுதிச் சுற்றுப் போட்டிகள் ஹம்பாந்தோட்டை, சூரியவெவ மைதானத்திலும் நடைபெறும்.