SuperTopAds

சூட்கேஸிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்..! நீடிக்கும் மர்மம், விசாரணைகள் தீவிரம்..

ஆசிரியர் - Editor I
சூட்கேஸிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்..! நீடிக்கும் மர்மம், விசாரணைகள் தீவிரம்..

குப்பை மேட்டில் சூட்கேஸில் அடைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலம் நேற்று மாலை வரையில் அடையாளம் காணப்படவில்லை. என கூறியிருக்கும பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ, சடலம் சுமார் 35 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட பெண் ஒருவரினுடையது எனவும் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,சப்புகஸ்கந்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாபிம பகுதியை அண்மித்து, எண்னெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு செல்லும் வீதியிக்கு அருகே குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. கடந்த இரு நாட்களாக அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வந்த நிலையில், 

அது தொடர்பில் சப்புகஸ்கந்த பொலிஸ் நிலைய சமூக பொலிஸ் பிரிவுக்கு பலரும் முறையிட்டுள்ளனர். இதனையடுத்தே நேற்று நண்பகல் அப்பகுதிக்கு பொலிஸார் சென்று நிலைமையை ஆராய்ந்துள்ளனர். இதன்போது அந்த குப்பை கொட்டப்பட்டிருந்த பகுதியில், 

சந்தேகத்துக்கு இடமான முறையில், பயணப் பை ஒன்று, பிளாஸ்டிக் பாய் ஒன்றினால் சுற்றப்பட்டு அவ்விடத்தில் கைவிடப்பட்டிருந்துள்ளமையும் அதிலிருந்து துர்வாடை வீசுவதும் பொலிஸாரால் கண்டறியப்பட்ட நிலையில், அந்த பயணப் பை சோதனை செய்யப்பட்டுள்ளது. 

இதன்போதே குறித்த பைக்குள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், சிவப்பு சட்டை ( கவுன்) அணிந்த பெண் ஒருவரின் சடலம் காணப்பட்டுள்ளது. சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டுள்ளதுடன் உடனடியாக சடலத்தை பொலிசாரால் அடையாளம் காண முடியவில்லை. 

இந்நிலையில் நேற்று மாலை அந்த பகுதிக்கு மஹர பதில் நீதிவான் ரமனி சிறிவர்தன வருகை தந்து சடலத்தை பார்வையிட்ட நிலையில், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை ராகம வைத்தியசலைக்கு அனுப்ப உத்தரவிட்டார். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் களனி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் ஆலோசனைக்கு அமைய, 

சப்புகஸ்கந்த பொலிஸாரும், களனி வலய குற்றத் தடுப்புப் பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.