வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவைக் கந்தன் ஆலயத்திற்கு அருகில் சிவபூமி திருக்குறள் வளாகத்துக்கான திருப்பணி ஆரம்பம்! 

ஆசிரியர் - Admin
வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவைக் கந்தன் ஆலயத்திற்கு அருகில் சிவபூமி திருக்குறள் வளாகத்துக்கான திருப்பணி ஆரம்பம்! 

மாவிட்டபுரம் சிவபூமி திருக்குறள் வளாகத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவைக் கந்தன் ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள காணியில் கொரோனா சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடைபெற்றது.

சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு அருளாசி வழங்கினார்.

மேற்படி நிகழ்வில் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன், மாவை ஆதீன ஹர்த்தா மகாராஜஸ்ரீ து.ஷ.இரத்தினசபாபதிக் குருக்கள், மாவை ஆதீன இளவரசு ஷ.இ.ஞானஸ்கந்த சர்மா, தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ க.செந்தில்ராஜக் குருக்கள், கோப்பாய் சுப்பிரமுனிய கோட்ட முதல்வர் ரிஷி தொண்டுநாத சுவாமிகள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் சி.சிவலிங்கராஜா, யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் பெருந்தலைவரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியருமான அ.சண்முகதாஸ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், சமூகவியல் துறைப் பேராசிரியருமான நா. சண்முகலிங்கன், பேராசிரியை கலாநிதி.மனோன்மணி சண்முகதாஸ், யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத் தலைவரும், கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையின் பிரதி முதல்வருமான செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன், ஓய்வுநிலை மூத்த நிர்வாக அதிகாரியும், பொருளாதார, சமூக ஆய்வாளருமான ம.செல்வின், யாழ்.வயாவிளான் மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர் க.கனகராசா,தெல்லிப்பழைப் பிரதேச செயலர் ச.சிவஸ்ரீ, வலி.வடக்குப் பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தனர்.

அதனைத் தொடந்து இடம்பெற்ற நிகழ்வில் செஞ்சொற்செல்வர், நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், பேராசிரியர் சி.சிவலிங்கராஜா, வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ், பேராசிரியர் நா. சண்முகலிங்கன், பேராசிரியை கலாநிதி.மனோன்மணி சண்முகதாஸ், செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன், ஓய்வுநிலை மூத்த நிர்வாக அதிகாரி ம.செல்வின் ஆகியோரின் உரைகள் இடம்பெற்றன.

நிகழ்வின் இறுதியில் சிவபூமி திருக்குறள் வளாக கட்டடப் பணிகளுக்குப் பொறுப்பான நல்லூரைச் சேர்ந்த இளம் கட்டடக் கலைஞர் கணேசபிள்ளை சாரங்கன் சிவபூமி அறக்கட்டளை சார்பில் ரிஷி தொண்டுநாத சுவாமிகளால் கெளரவிக்கப்பட்டார். தொடர்ந்து குறித்த திருப்பணி வெற்றிகரமாக நிறைவேற அங்கு நின்ற நல்லை ஆதீன முதல்வர் உள்ளிட்ட பெரியோர்களிடம் சாரங்கன் ஆசிகள் பெற்றுக் கொண்டார்.

யாழ்.மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், அவுஸ்திரேலியாவில் தற்போது புலம்பெயர்ந்து வாழ்ந்து வருபவருமான வைத்தியநிபுணர் கமலாகரன் சிவபூமி அறக்கட்டளைக்கு என அன்பளிப்பாக வழங்கி வைத்த ஆறரைப் பரப்புக் காணியில் திருக்குறள் வளாக நிர்மாணத்துக்கான அடிக்கல் இன்று நாட்டி வைக்கப்பட்டது. 

அவரது குடும்பத்தினரின் நிதிப் பங்களிப்பில் இடம்பெறவுள்ள திருக்குறள் வளாக கட்டட நிர்மாணப் பணிகளும் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு