யாழ்.மாதகல் கடற்கரையில் நங்கூரம் திருடியவர்களை அடித்து நொருக்கிய மக்கள்..! கடற்படை திருட்டுக்கு உடந்தை என திருடர்களும், மக்களும் குற்றச்சாட்டு..
யாழ்.மாதகல் கடற்கரையில் நங்கூரம் திருடுவதற்கு வந்த 4 பேர் அப்பகுதி பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட பின்னர் இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் பயன்படுத்தி இரு வாகனங்களும் கைப்பற்றப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.
நேற்று இரவு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, பட்டா ரக வாகனத்தில் வந்த 4 பேர் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நிலையில் அப்பகுதி மக்கள் குறித்த நபர்களை மடக்கி பிடித்து விசாரித்தபோது கடற்படையினர் தமக்கு 2 ஆயிரம் கிலோ இரும்பு தருவதாக கூறி அழைத்ததாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து ஆராய்ந்தபோது கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளை கட்ட வைத்திருந்த நங்கூரங்களை திருடி வாகனத்தில் ஏற்றியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் தமக்கு நங்கூரம் என்றால் என்னவென்றே தொியாது எனவும், கடற்படையினர் கூறியே தாம் வந்ததாக அவர்கள் கூறியிருக்கின்றனர்.
இதனையடுத்து நங்கூரம் திருடியவர்களை நையப்புடைத்த பொதுமக்கள் இளவாலை பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர். இந்நிலையில் இரும்பு திருடியவர்களை தேடி ஹயஸ் வாகனம் ஒன்றில் குழந்தைகள், பெண்களுடன் வந்தவர்கள் திருப்பி அனுப்பபட்டுள்ளனர். மேலும் நங்கூரம் திருடியவர்களை பொலிஸார் கைது செய்துள்ளதுடன்,
இரு வாகனங்களை கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மீனவர்கள் தெரிவிக்கையில், நாங்கள் பல இலட்சம் ரூபா பெறுமதியான எமது உடமைகள் அனைத்தையும் கடலிலேயே விட்டுச் செல்கின்றோம். வேறுபகுதியில் இருப்பவர்கள் வந்து இப்படி எமது கடலில் உள்ள உடமைகளை திருடிச் சென்றால் நாங்கள் என்ன செய்வது?
ஒவ்வொரு நங்கூரமும் ரூபா ஐயாயிரம் தொடக்கம் பதினைந்தாயிரம் பெறுமதியுடையவை. நாங்கள் கடன்பட்டுத்தான் எமது தொழிலுக்கு தேவையான உபகரணங்களை வாங்குகின்றோம். இது இவ்வாறு இருக்க உடமைகள் திருடப்பட்டால் நாங்கள் கடன் வாழங்கியவர்களுக்கு என்ன பதில் சொல்வது? எமக்கு பாதுகாப்பாக இருக்கவேண்டிய கடற்படையே
எமது சொத்துக்களை திருடுவதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கின்றது என்றால் கடற்படையினர் எதற்கு இங்கு இருக்கவேண்டும்?எங்களுக்கு தொடர்ந்து இவ்வாறு அட்டூழியங்கள் நடக்குமானால் நாங்கள் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவேண்டிவரும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.