யாழ்.ஆரியகுள புனரமைப்பு பணிகளை உடன் நிறுத்தவேண்டும்..! யாழ்.மாநகர முதல்வருக்கு விகாராதிபதி கடுந்தொனியில் கடிதமாம்..
யாழ்.நாக விகாரையை இல்லாதொழிப்பதற்கே ஆரியகுளத்தை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியிருக்கும் நாக விகாரை விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர், ஆரிய குளத்தை புனரமைக்கும் பணிகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என கடுந்தொனியில் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
யாழ்.மாநகரசபையினால் ஆரியகுளத்தின் புனரமைப்பு பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றது. சுற்றுலா பயணிகளை கவருவதற்கும், நகரின் மத்தியில் அழகை பேணுவதற்கும் இந்த முயற்சி எடுக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் ஆரியகுளத்தின் நடுவே தியான மண்டபம் அமைப்பதற்கு
நாக விகாரையின் விகாராதிபதி கோரியதாக சர்ச்சைகள் உருவாகியிருந்தது. இந்நிலையில் மீளவும் விகாராதிபதியினால் யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கு கடும் தொனியில் கடிதம் ஒன்று அனுப்பபட்டுள்ளதாக, நம்பகரமான தகவல்கள் தொிவிக்கின்றன.
யாழ்.மாநகரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் முதல்வர் மணிவண்ணன் பௌத்த ஆலயத்தை இல்லாதொழிக்க முயற்சிக்கிறார். என்று விகாராதிபதி அனுப்பிய கடிதத்தில் சுட்டப்பட்டுள்ளதாகவும், மாநகர முதல்வர் ஆரியகுளத்தில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து மது அருந்துவதற்கும்,
கஞ்சா புகைப்பதற்கும் வழி செய்து கொடுத்துள்ளதாகவும் அது பௌத்த கோவிலின் புனித தன்மையை பாதிக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளதாகவும், விகாரையின் திருவிழா காலங்களில் பக்தர்கள் தமது வாகனங்களை ஆரியகுளத்தின் அருகே நிறுத்துவார்கள் என்றும்
குளத்தை புனரமைத்து இருக்கைகள் அமைக்கப்பட்டால் வாகன தரிப்பிடம் இல்லாமல் விகாரைக்கு நெருக்கடி உருவாகும் எனவும் அதன் ஊடாக விகாரையை இல்லாதொழிக்க முதல்வர் முயற்சிக்கிறார் எனவும், முன்னைய விகாராதிபதி இறந்தபோது அவருடைய உடலை தகனம் செய்வதற்கு எதிராக
மணிவண்ணன் நீதிமன்றில் தடையுத்தரவு பெறுவதற்கு முயற்சித்ததையும் குறித்த கடிதத்தில் சாடியுள்ள விகாராதிபதி தற்போது மணிவண்ணன் விகாரையின் இருப்புக்கே நெருக்கடியை உருவாக்குகிறார் எனவும் சாடியுள்ளாராம். குறித்த கடிதம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக குறித்த கடிதம் அனுப்பபட்டபோதும்
இது குறித்த தகவல்கள் எதனையும் மாநகரசபை வட்டாரங்களால் வெளியிடப்படவில்லை.