பிரபாகரன் குண்டுச்சத்தம் கேட்டு திடுக்குற்றுப் போனதையும் அவதானித்தேன்:- ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ்
Q உங்களது ஊடகத்துறையின் ஆரம்பப் பயணம் எப்படி அமைந்தது?
சுமார் 50 வருடங்களுக்கு முன்னர், அதாவது 1965 ஆம் ஆண்டு கொழும்பு தொழில்நுட்பக் கல்லூரியில் விநியோக முகாமைத்துவப் பாடநெறியொன்றை மேற்கொண்டேன். அப்போது அந்தத் துறையிலேதான் எனக்கு ஆர்வமிருந்தது. அந்தச் சந்தர்ப்பத்திலே லேக் ஹவுஸ் நிறுவனத்தில் நிருபராக எனது நண்பர் ஒருவர் பணியாற்றிக் கொண்டிருந்தார். நான் ஓர் ஊடகவியலாளராக வருவதற்கு அவரது செயற்பாடுகள் என்னைத் தூண்டின. அதன் விளைவாக சண் ஆங்கிலப் பத்திரிகையின் அளுத்கம செய்தியாளராக விண்ணப்பித்தேன். அதனை ஏற்ற பத்திரிகை நிறுவனம் அளுத்கம பேருவளை பகுதி நிருபராக என்னை அமர்த்தியது. அன்று முதல் சிறு சிறு செய்திகளை சமர்ப்பித்து வந்தேன்.
அப்போது களுத்துறை, கட்டுக்குருந்தை பள்ளிவாசலுக்கு எதிரேயுள்ள காலி வீதியில் பிரமாண்டமான ஆலமரமொன்று கம்பீரமாகக் காட்சி தந்து கொண்டிருந்தது. இது உல்லாசப் பயணிகளாலும் கவரப்பட்டு வந்தது. காரணம் வீதியின் இரு மருங்குகளிலும் ஆழமாக வேர் பதித்து நடுவே சுரங்கப் பாதை போன்று பிரதான காலி வீதி ஊடறுத்துச் செல்லும் அதிசய கண்கொள்ளாக் காட்சி தந்து கொண்டிருந்தது. அப்போது, அந்த ஆலமரம் வேரோடு சாய்ந்த சம்பவம் நிகழ்ந்தது. நான் இந்த செய்தியைத் தயாரித்துக்கொண்டு கொழும்பிலுள்ள சண் பத்திரிகையின் ‘தவஸ’ காரியாலயத்திற்குச் சென்றேன். அங்குள்ள சண் செய்தியாசிரியரிடம் எனது செய்தியை ஒப்படைத்தேன். அதனை வாசித்த அவர் உள்ளே சென்று மேலதிகாரியிடம் அதனைக்காட்டி ஏதோ குசுகுசுத்துக் கொண்டிருந்தார். என் மீது ஏதோ பழி சுமத்தப் போகிறாரோ என்று என் உள்ளம் படபடத்துக் கொண்டிருந்தது. என்னை நோக்கி வந்த செய்தியாசிரியர், நாளை முதல் அலுவலக செய்தியாளராக வந்து கடமையாற்றும்படி என்னைக் கேட்டார். அப்போதுதான் எனக்கு நிம்மதியான மூச்சு வெளி வந்தது. உடனடியாக ஏற்கும் நிலையில் நான் இல்லை. ஒரு வாரம் அவகாசம் பெற்று அதன்படி வேலைக்கமர்ந்தேன். இதுவே எனது ஊடகப் பயணத்தின் முதல் படியாக அமைந்தது.
Q அன்றைய சம்பள நிலை எப்படியிருந்தது?
தர்ஹா நகரிலிருந்து கொழும்புக்கு போக்குவரத்து செலவு மாதம் 24 ரூபா. எழுதும் செய்தி வரிகளைப் பொறுத்து மாதம் 18 ரூபாவே கொடுப்பனவாகக் கிடைத்தது. கஷ்ட நஷ்டங்களைத் தாங்கிக்கொண்டு கடமையாற்றினேன். சில சந்தர்ப்பங்களில் செய்திகள் சேகரித்துக் கொண்டு அலுவலகம் வருவதற்குள் மாலை வேளையாகும். அதனை எழுதிக் கொடுப்பதற்குள் இரவாகிவிடும். இரவு 10.30 மணி அளுத்கமை புகையிரதத்தில் பயணித்து அங்கிருந்து கால்நடையாக தர்காநகர் சென்ற சந்தர்ப்பங்கள் பல.
Q சண் பத்திரிகையில் உங்களுக்கு முதன் முதலில் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புக்கள் என்ன?
1970 களின் ஆரம்பத்தில் தமிழ் கட்சிகளது செய்திகள் திரட்டி எழுதும் பொறுப்பு என்னிடம் தரப்பட்டது. இது எனது வாழ்க்கையின் ஒரு மைல் கல் என்றே நான் கருதுகிறேன். இதனால் தமிழ் அரசியல் தலைவர்களைச் சந்திப்பதற்காக பல தடவைகள் வடக்கு, கிழக்கு சென்று அவர்களுடன் ஆழமான தொடர்புகளை வைத்துக்கொண்டேன்.
Q வடக்கு வாலிபர்களின் போராட்ட எழுச்சியை நீங்கள் எப்போது கண்டுகொண்டீர்கள்?
1976 இல் துரையப்பாவின் கொலைதான் வடக்கு வாலிபர்களின் போராட்ட முதலாவது சமிக்ஞை என்று நான் கருதுகிறேன். அதன் பின்னரே பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கி அவர்களிடமிருந்து ஆயுதங்களை அபகரிப்பது, வங்கிக் கொள்ளை என்று தொடர்ந்தன. 1980 களின் ஆரம்பத்தில் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் இந்திய விஜயத்தின்போது ஊடகவியலாளனாக நானும் புதுடில்லிக்கு சென்றிருந்தேன். அப்போது இலங்கை தமிழ் வாலிபர்கள் அங்கு இராணுவ பயிற்சி முகாம் நடத்திக் கொண்டிருப்பதை படங்களுடன் வெளியான தகவல்களை ‘இந்திய டுடே’ பத்திரிகையில் பார்த்தேன். அதே காலப்பகுதியில் இலங்கையிலும் தமிழ் இளைஞர்களின் எழுச்சி மேலோங்கி வரும் எதிரொலிகளையும் கண்டுகொண்டேன்.
Q பாதுகாப்புத்துறை தொடர்பான புலனாய்வு விடயங்களை ஆரம்பத்தில் சண் பத்திரிகையில் எழுதுவதன் மூலம் தாங்கள் உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேசம் வரையிலும் புகழ்பெற்றுள்ளீர்கள். அக்கால கட்டத்தில் தமிழ் ஆயுதக் குழுக்களால் எதிர்நோக்கிய அனுபவங்கள் குறித்து…?
மறைந்த லலித் அத்துலத் முதலி தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அன்றிருந்த நிலையில் வடக்கு, கிழக்கு சென்று வருவதற்கு எனக்கு விசேடமான அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனால் பல சந்தர்ப்பங்களில் அங்கு சென்று வந்த நிலையில் ஒரு முறை யாழ். கோட்டை இராணுவ முகாமுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது யாழில் பல பிரதேசங்கள் புலிகளின் பிடியில் இருந்தன. அங்குள்ள அரசாங்க அதிபர் அலுவலகம் தமிழ் போராளிகளின் தலைமையகமாக செயற்பட்டுக் கொண்டிருந்தது. நான் ஹெலிகொப்டரில் அந்த அலுவலகத்தின் மேலால் பறந்து கொண்டிருக்கையில் கீழிருந்து எம்மை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டது. நாம் ஒருவாறு தப்பிப் பிழைத்தோம்.
Q ஊடக ஈடுபாட்டில் நீங்கள் முதன்முதலாக எதிர்நோக்கிய பயங்கரம் அதுதானா?
ஆனால் உண்மையில் இது நிகழ்ந்து சில மணித்தியாலங்களுக்குப் பின்னரே பயங்கரமான அபாய அனுபவம் ஒன்றை எதிர்நோக்கினோம் என்று கூறுவதே பொருத்தமாகும்.
நானும் என்னுடன் வந்திருந்த எமது புகைப்படப் பிடிப்பாளர் பேர்ட்டி மென்டிஸும் யாழ். கோட்டையிலிருந்து யாழ். நூல் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தோம். அப்போது திடீரென கோட்டைப் பக்கத்திலிருந்து இராணுவத்தினரும் நூல் நிலையத் திசையிலிருந்து தமிழ் ஆயுததாரிகளும் பரஸ்பரம் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு இடையே அகப்பட்டுக் கொண்ட நாம் இரு கைகளையும் உயர்த்தியவாறு நகர முடியாமல் பீதியில் உறைந்து போய் நின்றோம். நல்ல வேளை வேட்டுப் பிரயோகம் ஓய்ந்தது. எமக்கு எதிரே இருந்த பதுங்கு குழியில் பதுங்கியிருந்த தமிழ் வாலிப துப்பாக்கிதாரி வெளியே வந்தார். பீதியில் நின்ற எம்மைப் பார்த்து வரும்படி சைகை காட்டினார். இப்போது எமது படபடப்பு பன்மடங்காகியது. அடிமேல் அடி எடுத்து முன்நகர்ந்தோம். எம்மை விசாரித்து விபரங்களைக் கேட்டறிந்தார். குளிரூட்டப்பட்ட குளிர்பானம் தந்தார். எமது உள்ளங்களும் அப்போதுதான் குளிர்ந்து போனது.
Q அன்றிருந்த தமிழ் ஆயுதக் குழுத் தலைவர்களை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்ததா?
நான் அப்போது யாழின் ஞானம் ஹோட்டலில் தங்கியிருந்த போதுதான் கொழும்பு புறக்கோட்டை பஸ் நிலையத்தின் அருகே குண்டு வெடித்த சம்பவம் நிகழ்ந்தது. அதன் எதிரொலியாக யாழிலும் ஏதும் அசம்பாவிதங்கள் சம்பவிக்கலாம் என்று நாம் எண்ணினோம். அதனை உண்மைப்படுத்தும் விதத்தில் சாவகச்சேரிப் பக்கத்தில் இராணுவம் தாக்குதல் நடத்துவதான தகவல் கிடைத்தது. அந்த சந்தர்ப்பத்தில்தான் தமிழ் ஆயுதத் தலைவர் ஒருவர் என்னைச் சந்தித்தார். அப்போதுள்ள நிலையில் அவருடன் அதிக நேரம் உரையாடக் கிடைக்கவில்லை. அப்போதும் மேலே ஹெலிமூலம் தாக்குதல் தொடர்வதை உணர்ந்தோம். எனவே நாம் தொடர்ந்து அங்கிருக்காது கோட்டை இராணுவ முகாமுக்கு மீண்டோம். நாம் போகும் வழியிலும் இருபக்க துப்பாக்கிப் பிரயோகங்கள் நடந்து கொண்டிருந்தன. அதிலும் நாம் தப்பித்தே இராணுவ முகாமை அடைந்தோம்.
Q பிரபாகரனைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததல்லவா?
ஆம். இந்திய இராணுவம் இருந்த யுத்த நிறுத்த கால சந்தர்ப்பத்தில் பிரபாகரனைச் சந்தித்தேன். எனது இரு கண்களும் துணியால் கட்டப்பட்டே அவர் இருக்கும் இடத்திற்குக் கூட்டிச்சென்றனர். கண்கட்டு அவிழ்க்கப்பட்ட பின்னர் பிரபாகரனைக் கண்டேன். நான் எடை போட்டதை விடவும் அவர் கட்டையான தோற்றத்துடனே தான் காணப்பட்டார். அப்போது அருகே குண்டுச்சத்தம் கேட்டது. பிரபாகரன் திடுக்குற்றுப் போனதையும் அவதானித்தேன்.
Q ஊடகத்துறை ஈடுபாட்டில் யுத்த முனை செய்தி திரட்டும் சவாலை எவ்வாறு நோக்கினீர்கள்?
ஊடகத்துறையில் யுத்த கள செய்தி சேகரிப்பு என்பது சிக்கலும் சவாலும் நிறைந்ததொரு பணியாகும். பொழுது போக்கு, அறிவியல் துறைகளுக்கப்பால் சென்று செயலாற்றக்கூடிய தகவல் திரட்டலாகும். இது மனித உயிர்களையும் நாட்டையும் பாதுகாக்கக் கூடிய பொறுப்பு வாய்ந்த பணியென்றே இதனை நான் நோக்குகிறேன். இது விடயமாக நாம் ஒன்றை வெளியிடும் போது நிச்சயமாக சம்பந்தப்பட்ட இரு தரப்பில் ஒரு தரப்பின் அதிருப்தியை சம்பாதிக்க வேண்டி ஏற்படுவதும் தவிர்க்க முடியாததாகும். யுத்தகால தகவல் வெளியிடுவதில் பின் விளைவுகள் பாரதூரமாக அமைந்துவிடுவதுண்டு. நாம் வெளியிட்ட தகவல்கள் சரியானவையா என்பதில் கூட இப்போதும் என் மனதில் ஐயப்பாடு நிலவுகிறது. இன்று யுத்தக் குற்றம் தொடர்பாக ஜெனிவா மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடர்களிலும் பேசப்பட்டு வருவதைக் காண்கிறோம். யுத்த முனை செய்தி சேகரிப்புக்காக விசேட பயிற்சி தேவை. இது இலங்கையில் இல்லை. இதனால் நாம் ஒருவரையறைக்குள் இருந்தே எமது பொறுப்பை நிறைவேற்ற வேண்டிய நிலையிலே தள்ளப்பட்டுள்ளோம். இந்நிலையிலும் நான் கடமையாற்றிய தவஸ நிறுவனமோ டைம்ஸ் நிறுவனமோ அவற்றின் பிரதம ஆசிரியர்களோ என் செய்திகள் மீது நம்பிக்கை வைத்திருந்தனர். இதேபோன்றே நான் தகவல் அனுப்பும் சர்வதேச ஊடகங்களும் என்னை நம்பி செய்திகளை வெளியிட்டு வந்துள்ளன.
Q யுத்த சூழ்நிலை செய்தி திரட்டலின்போது நீங்கள் சந்தித்த கசப்பான அனுபவங்கள் உண்டா?
உள்நாட்டுப் போரின்போது உண்மையான தியாக மனப்பான்மையோடு இராணுவ வீரர்கள் பங்காற்றியது போன்றே யுத்தத்தை வைத்தே பிழைப்பு நடத்திய முதலாளிமார்களும் இருக்கவே செய்தனர். மிக் விமான கொடுக்கல் வாங்கல் மோசடி விவகாரத்தை இதற்கு உதாரணமாக முன்வைக்கலாம். இதனை அம்பலத்துக்குக் கொண்டு வந்ததன் விளைவாக நாட்டை விட்டே வெளியேறி பதுங்கி வாழ வேண்டிய நிலைக்கு நான் ஆளானேன்.
Q யுத்த புலனாய்வு செய்தி திரட்டலின்போது எதிர்நோக்கிய பயங்கர அனுபவங்கள் உண்டா?
எனது வீட்டினுள் நுழைந்து என்னைக் கொலை செய்வதற்கு முயன்ற சந்தர்ப்பத்தைக் குறிப்பிடலாம். சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் புதிய அரசு வந்த பின்னர் குற்றவியல் நீதிமன்றத்தின் மூலம் மேற்படி தீர்ப்பு மாற்றப்பட்டது. அது குறித்து எனது மனதில் சந்தேகம் நிலவுகிறது.
Q அன்றைய காலகட்டத்தில் உங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டதல்லவா?
ஆம், சந்திரிகா அம்மையாரின் பணிப்புரைக்கமைய கமாண்டோ படையணியின் பாதுகாப்பு தரப்பட்டது. அவர்கள் அர்ப்பணிப்போடு எனக்கு உயர்ந்த பாதுகாப்பைத் தந்தனர். ஆனால் அந்த நிலையில் அவர்களில் ஒருவர் எனது நடவடிக்கைகள் குறித்து மேல் மட்டத்தினருக்கு துப்புகள் வழங்கி வந்தார். எந்த வி.ஐ.பி. க்கும் வழங்கப்படும் பாதுகாப்பிலும் இத்தகைய ஒருவர் அமர்த்தப்படுவதும் சகஜம்தான் என்பதை நான் அறிவேன்.
Q உள்நாட்டு புலனாய்வுத் துறை ஊடகவியலாளர்களில் தங்களுக்கு நன்மதிப்புக் கிடைத்தமைக்கான காரணம் என்னவெனக் கருதுகிறீர்கள்?
நான் அறிக்கையிடுவதற் குண்டான விடயத்தில் கவனம் செலுத்துவதுடன் மட்டும் நின்று விடாது அதனுடன் கூடிய விடயங்களை அணுகி ஆழமாகத் தேடிப் பார்த்தே பூரணப்படுத்துவேன். அத்துடன் முட்டாள்தனமாக நடப்பதிலும் தவிர்ந்து கொள்வேன். இதுவே எனது புலனாய்வு ஊடகத்துறை உயர்வுக்கான இரகசியமாகும்.
Q முன்னாள் பாதுகாப்புத் துறை உயரதிகாரிகள் உங்களுடன் எப்படி நடந்து கொண்டார்கள்?
மிகவும் நல்ல நிலையில்தான் அவர்களுடனான உறவுகள் நிலவி வந்தன. ஆனால் பாதுகாப்புப் பிரிவில் இடம்பெற்றுக்கொண்டிருந்த ஊழல், மோசடிகளை வெளிக்கொணர்ந்ததன் மூலமே அவர்களில் சிலர் என்னுடன் முரண்பட்டனர். இதன் விளைவாக சிலர் பலவிதத்திலும் என்னைப் பழிவாங்க ஆரம்பித்தனர். எனது வீட்டில் விபசார விடுதியொன்று நடத்தப்பட்டு வருவதாக திட்டமிட்ட பிரசாரம் ஒன்றை முன்னெடுத்தனர். இதனை வைத்து ஒரு சில பிரபலங்கள் அந்த வார்த்தைகளை நம்பி எனது வீட்டிலிருந்து விலைமாது ஒருவரைப் பெற்றுக் கொள்ளலாமா? என்று வினவிய சந்தர்ப்பங்களும் உள்ளன.
Q உங்கள் வாழ்க்கை வரலாறு மற்றும் தொழில் அனுபவங்களை நூலாக்கம் செய்யும் எண்ணமில்லையா?
உண்மையிலேயே அந்த முயற்சியில் நான் ஈடுபட்டுக் கொண்டுதான் வந்தேன். குறிப்பிடத்தக்களவு எழுதி வைத்திருந்தேன். ஆனால் அப்போது ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக அனைத்து ஆவணங்களையும் தீக்கிரையாக்கினேன். ஏனெனில் இந்த ஆவணங்கள் அவர்களது கைகளில் சிக்கினால் மேலும் பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும் என்ற பீதியிலேயே அவ்வாறு செய்தேன்.
Q மீண்டும் எழுதும் யோசனை இல்லையா?
அது மிகவும் சிரம சாத்தியமான விடயமாகும். ஒரு சில முக்கிய விடயங்கள், தரவுகள், காலம் என்பனவற்றை மீட்டிப் பார்ப்பதில் மிகவும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதற்கு கால, நேரம் இடம் தருவதாக இல்லை.