SuperTopAds

கடும் எதிர்ப்புகள்: யொஹானியுடன் எடுத்த புகைப்படத்தை நீக்கிய ஹாரிஸ் ஜெயராஜ்!!

ஆசிரியர் - Editor II
கடும் எதிர்ப்புகள்: யொஹானியுடன் எடுத்த புகைப்படத்தை நீக்கிய ஹாரிஸ் ஜெயராஜ்!!

தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பலைகளை அடுத்து இலங்கைப் பாடகி யொஹானி த சில்வாவுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது ருவிட்டரில் இருந்து பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் நீக்கியுள்ளார்.

யொஹானியின் தந்தையான ஓய்வுபெற்ற இலங்கை மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா 2009 ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டத்தின் இறுதி கட்டத்தின் போது இலங்கை இராணுவத்தின் 55 வது பிரிவுக்கு தலைமை தாங்கிய நிலையில் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பானவர் என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அவரின் மகளான யொஹானி 'மெனிகே மகே ஹிதே' என ஆரம்பிக்கும் சிங்களப் பாடல் வெளியிட்டார். இது பிரபலமாகி இலட்சக்கணக்கானவர்கள் சமூக வலைத்தளங்களில் இதனைப் பார்வையிட்டனர். இந்தப் பாடல் "பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடியதற்காக" தனது தந்தையை "ஹீரோ" என புகழும் வகையில் அமைந்துள்ளது.

இந்நிலையில் தமிழகம் சென்றிருந்த யொஹானியை சந்தித்த ஹாரிஸ் ஜெயராஜ் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ருவிட்டரில் பதிவிட்டு அவரைப் புகழ்ந்திருந்தார்.

இதனைடுத்து உடனடியாக அவரது இந்த ருவிட்டர் பதிவு தொடர்பில் கடும் எதிர்ப்புக்கள் எழும்பியிருந்தன. இதனையடுத்தே இலங்கைப் பாடகி யொஹானி த சில்வாவுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது ருவிட்டரில் இருந்து பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் நீக்கியுள்ளார்.