கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்ற உரை

ஆசிரியர் - Admin
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்ற உரை

பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் கடந்த 23.09.2021 திகதியன்று தியாக தீபம் திலீபன் நினைவேந்தலில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மநாகர சபை உறுப்பினர் ராஜீவ்காந்த், கட்சி உறுப்பினர் த.ராஜசிறீகாந்தன் ஆகியோர் சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டமை தொடர்பிலும், பெண் ஊடகவியலாளர்கள் இருவரது தொலைபேசி சட்டவிரோதமான முறையில் பொலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டமை தொடர்பிலும் அதற்கெதிராக நியாயம் கேட்ட சட்டத்தரணி சுகாஷ் அவர்களை கைது செய்ய வேண்டுமென இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர அவர்கள் ஊடகம் ஒன்றுக்கு கூறிய கருத்துத் தொடர்பிலும் உரையாற்றியிருந்தார். அவரது உரையின் முழு விபரம் வருமாறு.

கனம் அவைத்தலைவர் அவர்களே,

இந்த தருணத்தில் அண்மையில் எனது சக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வராஜா கஜேந்திரன் மற்றும் எனது கட்சியை சார்ந்த சட்டத்தரணி திரு சுகாஸ் ஆகியோர் உள்ளிட்ட சிலர் மீது நடத்தப்பட்ட சில நடவடிக்கைகள்  குறித்து இந்த சபையின் கவனத்துக்க்கு கொண்டுவர விரும்புகிறேன்.

கடந்த செப்ரெம்பர் 23 ம் திகதி கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அவர்களை  யாழ்ப்பாண பொலிஸ் பொறுப்பதிகாரி நேரடியாகச் சென்று கைது செய்திருந்தார். அதை நீங்களும் அறிந்திருப்பீர்கள்.

செப்ரெம்பர் 15 ம் திகதி முதல் 26 ம் திகதி வரையிலான காலப்பகுதியில் உண்ணாவிரதமிருந்து  உயிர்நீத்த திரு திலீபன் அவர்களினை நினைவு காலப்பகுதியாகும். அந்தக் காலப்பகுதியில் பொதுவாக அனைத்து தமிழர்களாலும் அவர் நினைவு கூறப்படுவது வழமையாகும்.

ஆனால் அப்படி உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த திரு திலீபன் அவர்களை நினைவுகூர முடியதென கைது நடந்த அந்த சமயத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்ப்பினர் திரு செல்வராஜா கஜேந்திரன் அவர்களுக்கு பொலீசாரால் கூறப்பட்டது.

அன்றைய தினம் திரு செல்வராஜா கஜேந்திரன் தனியாளாக அந்த நினைவிடத்திற்குச் சென்று தீபம் ஏற்ற முற்பட்டபோது அவர் அங்கிருந்த பொலீசாரால் உடல் ரீதியாக தாக்கப்பட்டு, பலவந்தமாக பொலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டு பொலீஸ் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டார். 

அவரோடு அங்கு வந்துசேர்ந்த எமது கட்சியை சேர்ந்த இன்னும் இரு உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டிருந்தார்கள். அது மட்டுமல்லாது, அந்த பிரதேசத்தில் நின்றிருந்த எமது ஆதரவாளர்களான,  இரு பெண் செய்தியாளர்களும் கூட ,  உடல்ரீதியான தாக்குதலிற்கும் கையாளலுக்கும் உட்படுத்தப்ப்பட்டு, அவர்களது கையடக்க தொலைபேசிகளும் பொலீசாரால் கையகப்படுத்தப்பட்டது. பின்னர் அங்கு வந்துசேர்ந்த எமது கட்சியை சேர்ந்த சட்டத்தரணி சுகாஷ், அந்தப் பெண் செய்தியாளர்கள் மீது பொலீசார் தாக்குதல் நடத்திய விதம் குறித்தும் கைது குறித்தும்  ஆட்சேபம் தெரிவித்ததை அடுத்தும் அத் தொலைபேசிகள் மீளவும் வழங்கப்பட்டன.

தடை செய்யப்பட்ட அமைப்பொன்றின் அங்கத்தவரொருவரை நினைவு கூருவதனாலேயே திரு கஜேந்திரனை கைது செய்வதாக ஆரம்பத்தில் பொலீசார் தெரிவித்தனர்.  ஆனால் விடுதலைப் புலிகள் எனும் அமைப்பை நினைவு கூராது தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்களை கூட நினைவுகூரலாம்  என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என சொல்லப்படுவதால்,  தன்னை கைது செய்வதற்கு ஏதாவது நீதிமன்ற கட்டளை இருக்கின்றதா என கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பொலீசாரிடம் திரும்பத் திரும்பக் கேட்டபோதும், தம்மிடம் ஒரு நீதிமன்ற கட்டளை இருப்பதாக யாழ் பொலீஸ் பொறுப்பதிகாரி கூறிக்கொண்டாரே  தவிர அப்படி எந்த ஒரு நீதிமன்ற கட்டளையும் இருந்திருக்கவில்லை.

ஆனால் இறுதியில் திரு செல்வராஜா கஜேந்திரன் அவர்கள் பொலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து பிணையில் விடுவிக்கப்பட்ட்போது, அவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழோ அல்லது குற்றவியல் சட்டகோவையின் 106 ம் பிரிவின் கீழோ கைது செய்யப்படவில்லை என்றும் மாறாக கோவிட் விதிகளை மீறியதற்காகவே கைது செய்யப்பட்டார் என்றும் அவருக்கு கூறப்பட்டிருந்தது.

இந்த இடத்தில் நான் இந்த சபைக்கு கொண்டு வர விரும்பும் விடயம் என்னவெனில்  திரு திலீபன் அவர்களை நினைவு கூர்ந்தமைக்காக கஜேந்திரனை கைது செய்யவில்லை என பொலீசாரால் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலும், பொதுமக்கள் பாதுகாப்புக்கு பொறுப்ப்பான அமைச்சர் என அறியப்படுகிற திரு சரத் வீரசேகர அவர்கள் அதற்கு முற்றிலும் மாறாக தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினரை நினைவு கூர்ந்தமையாலேயே கைது செய்யப்பட்டதாக ஒரு பொதுசன ஊடகம் ஒன்றில் பதிவு செய்திருந்தார்.

அதுமட்டுமல்லாது , திரு சரத் வீரசேகர அவர்கள், அதற்கு மேலாகவும் சென்று , அங்கு இரு பெண் செய்தியாளர்கள், உடல் நீதியாக தாக்கப்பட்டு  கைத்தொலைபேசிகள்  சட்டவிரோதமான முறையில் கையக்கப்படுத்தட்டமைக்கு எதிராக குரல் கொடுத்த எமது கட்சி அங்கத்தவரான சட்டத்தரணி திரு சுகாஸ் கனரத்தினம் அவர்கள், நினைவுகூரலில் ஈடுபட்ட செல்வராஜா கஜேந்திரனுக்கு ஆதரவாக சட்டவிரோதமாக செயற்பட்டார் எனவும் அதற்காக அவரை கைது செய்யவேண்டும் எனவும் மோசமான அரக்கத்தனத்துடன் அந்த ஊடகத்துக்கு  தெரிவித்திருந்தார்.

கனம் அவைத்தலைவர் அவர்களே, பொதுமக்கள் பாதுகாப்புக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருக்கும் திரு சரத் வீரசேகர அவர்களின் புத்திசுவாதீனம் சந்தேகதிற்கிடமானது என்பது எம் அனைவருக்கும் தெரிந்த விடயம்.

ஆனாலும் அப்படிப்பட்ட ஒருவரை இப்படியான ஒரு முக்கியத்துவம்  வாய்ந்த அமைச்சுக்கு பொறுப்பாக நியமித்து அவர்,  பொலிஸார் தண்டனை பற்றிய பயமெதுவும் இன்றி இப்படியான  சட்டவிரோத நடவடிக்கைகளையும் சட்டவிரோத கைதுகளை செய்வதை ஊக்குவித்து அவற்றை மக்களுக்கு நியாப்படுத்திக்கொண்டிருக்கிறார் 

என்பதையும் இந்த சபையும் இந்த அரசாங்கமும் நிச்சயம் கவனத்தில் எடுக்க வேண்டும். இப்படியான சட்டத்துக்கு புறம்பான கூற்றுக்களுக்கான முழுப்பொறுப்பையும் அவர் எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதையும் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன். எனவும் வலியுறுத்தினார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு