லொஹான் ரத்வத்த மீது குற்றவியல் விசாரணை நடத்த வேண்டும்!

ஆசிரியர் - Admin
லொஹான் ரத்வத்த மீது குற்றவியல் விசாரணை நடத்த வேண்டும்!

தமிழ் அரசியல் கைதிகளை மிரட்டிய இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீது குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

ஒரு வருடத்திற்கும் முன்னர் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தில் கைதிகள் சிலர் பலியாகியிருந்தனர்.விசாரணைக்குழு அமைக்கப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டது.

அண்மையில் அநுராதபுரம் சிறைச்சாலையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சென்று கைதிகளை அச்சுறுத்திய சம்பவத்தைத் தொடர்ந்து அவர் பதவிவிலகினார். அதன் பின் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு தற்போது ஒரு மாதமாகின்ற போதிலும் அந்த குழு முன்வைத்த பரிந்துரைகள் என்ன என்பது குறித்து இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை.

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த செய்த செயற்பாட்டினை குற்றவியல் விசாரணையின் படியே விசாரிக்கப்பட வேண்டும். ஆனால் அதனை செய்யாமல் அரசாங்கம் அதனை மூடிமறைக்க முயற்சிக்கின்றது. 2012ஆம் ஆண்டில் கொழும்பு வெலிக்கடை சிறையில் கைதிகள் பலர் உயிரிழந்தனர். விசாரணை குழு அமைக்கப்பட்டு அறிக்கையும் வெளியிடப்பட்டது. இன்று வரை அதன் பரிந்துரைகள் அவை செயற்படுத்தப்படவில்லை.

அநுராதபுரச் சிறையில் இடம்பெற்ற சம்பவத்திலும்,அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டாலும் கூட அவையும் நடைமுறைப்படுத்தப்படாது என்ற அச்சம் உள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறைமா அதிபரிடமும் முறையிடப்பட்டாலும் விசாரணை இடம்பெறுவதில்லை. சிறைக்கைதிகளின் உயிர் பாதுகாப்பு ஸ்ரீலங்கா அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்.

ஆகவே தமிழ் அரசியல் கைதிகளை மிரட்டிய இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீது குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

எனினும் இதற்கு பதிலளித்து உரையாற்றிய ஸ்ரீலங்கா நீதியமைச்சர் அலிசப்ரி, அநுராதபுரம் சிறையிலுள்ள தமிழ்க் கைதிகள் உட்பட எவருக்கும் எந்தவொரு உயிர் அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் விசாரணை அறிக்கை இன்னும் தனக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு