ஒற்றையாட்சி தீர்வை இந்தியா முன்வைக்கக் கூடாது!
தமிழர் பிரச்சினைக்கு 13 ஆவது திருத்தம் உள்ளடங்கலாக ஒற்றையாட்சிக்குள் தீர்வினை வழங்கக்கூடிய எந்தவொரு யோசனையையும் இந்தியா முன்வைக்கக்கூடாது. என்று அந்நாட்டு வெளியுறவுச்செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவுடனான சந்திப்பின்போது வலியுறுத்தியதாக தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் தலைவரும் யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கும் நலன்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகள் வட, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் இந்திய வெளியுறவுச்செயலரிடம் எடுத்துரைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் இன்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தமிழர்களின் பிரச்சினைக்கு 13 ஆவது திருத்தத்தின் ஊடாகத் தீர்வை வழங்கவேண்டும் என்பதே இந்தியாவின் நீண்டகால நிலைப்பாடாக இருந்துவருவதாக இதன்போது தெரிவித்த இந்திய வெளியுறவுச்செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, அதனை எதிர்வருங்காலங்களிலும் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று குறிப்பிட்டார். மறுபுறம் இந்திய வெளியுறவுச்செயலருக்கும் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஊடகங்களின் வாயிலாக அறிந்துகொண்டோம்.
அதன்படி நாம் கூட்டமைப்பிலிருந்து விலகுவதற்கு 11 வருடங்களுக்கு முன்னர் எம்.கே.நாராயணன் இலங்கை வந்தபோது வலியுறுத்தப்பட்ட அதே விடயங்கள்தான் இப்போது மீண்டும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. இதிலிருந்து ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டு, தமிழ்த்தேசியத்தைப் புறக்கணித்து, தமிழர்களின் அபிலாஷைகளைக் கைவிடுகின்ற கூட்டமைப்பின் போக்கு மீண்டும் மீள உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஒற்றையாட்சியின் கீழான தீர்வை நிராகரிக்கின்ற பொறுப்பு தமிழ்மக்களின் கைகளிலேயே இருக்கின்றது.
கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்க்ததினால் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு, அதில் 13 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் மாற்றியமைக்கப்பட்டு, ஒற்றையாட்சியின்கீழ் தீர்வை வழங்குவது குறித்த சர்வசன வாக்கெடுப்பில் மக்கள் அதற்கு எதிராக வாக்களிக்கவேண்டியது அவசியமாகும் என்று தெரிவித்தார்.
மேலும் கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், 'இந்திய வெளியுறவுச்செயலருடனான எமது சந்திப்பின்போது பேசப்பட்ட விடயங்களுக்குப் புறம்பான தகவல்களை அடிப்படையாகக்கொண்டு தமிழ்ப்பத்திரிகையொன்றில் (ஈழநாடு) ஆசிரியர் தலையங்கமொன்று எழுதப்பட்டிருக்கின்றது.
13 ஆவது திருத்தத்தின் ஊடாகத் தமிழ்மக்களுக்கான தீர்வு வழங்கப்படவேண்டும் என்று வெளியுறவுச்செயலர் வலியுறுத்தியபோது அதனை நாம் மறுக்கவில்லை என்றும் யதார்த்த அரசியலை விளங்கிக்கொண்டு, ஏனையோரைப்போன்ற முகவர்களாக செயற்படுகின்றோம் என்றும் பொருள்படும்வகையில் அந்த ஆசிரியர் தலையங்கள் எழுதப்பட்டிருக்கின்றது. இதுகுறித்து நாம் அப்பத்திரிகையின் உரிமையாளர் மற்றும் ஆசிரியருக்குத் தெளிவுபடுத்தியிருக்கின்றோம்.
இனிவருங்காலங்களில் எமது கட்சியுடன் தொடர்புடைய விடயங்களை எழுதும்போது, அத்தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து எம்மிடம் கேட்டறிந்து தெளிவுபடுத்திக்கொள்ளவேண்டும்' என்றும் வலியுறுத்தினார்.