வடக்கிற்கு ஒதுக்கப்பட்ட 1,522 மில்லியன் ரூபா எங்கே?
2021 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இதுவரையில் 20 வீத நிதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பெறுமதிசேர் வரி திருத்த சட்ட மூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையின் மோசமான பொருளாதார வீழ்ச்சிக்கு கொரோனா வைரஸ் காரணமல்ல. நிதி அமைச்சின் தவறான கொள்கையும் வழிகாட்டலுமே பொருளாதாரம் வீழ்ச்சியடையக் காரணமாகியுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் மீது பழி போடப்படுகின்றது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியால் கட்டிட நிர்மாணத் தொழிலும் ஒப்பந்த காரர்களும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டிட நிர்மாணத்திற்கு தேவையான பொருட்கள் 20 வீதம் முதல் 90 வீதம் வரை விலைகள் அதிகரித்துள்ளன. இதனால் வடக்கு மாகாண கட்டிட ஒப்பந்த காரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை 2021 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இன்றுவரை 20 வீத நிதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.மிகுதி 80 வீதம் வழங்கப்படவில்லை. அதாவது வடக்கு மாகாண சபைக்கு இன்னும் 1,522 மில்லியன் ரூபா வழங்கப்பட வேண்டியுள்ளது.
ஆனால் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்னும் ஒரு சில தினங்களில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில் அடர்க்கிடையில் அந்த மிகுதி 1522 மில்லியன் ரூபாவையும் நிதி அமைச்சு வடக்கு மாகாண சபைக்கு வழங்குமா என்பது தொடர்பில் நிதி அமைச்சர் அறிவிக்க வேண்டும்.
அதே நேரம் அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற திட்டத்தில் வடக்கு மாகாணத்திற்கு 126 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. அதுவும் வழங்கப்படவில்லை என்றார்.