SuperTopAds

ஆசிய மேசைப்பந்தாட்ட வரலாற்றில் இலங்கை வீராங்கனை சாதனை!!

ஆசிரியர் - Editor II
ஆசிய மேசைப்பந்தாட்ட வரலாற்றில் இலங்கை வீராங்கனை சாதனை!!

ஆசிய மேசைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தனிநபர் பிரிவின் போட்டியொன்றில் இலங்கை மேசைப்பந்தாட்ட வீராங்கனையான முத்துமாலி பிரியதர்ஷனி முதல் 16 இடங்களுக்குள் முன்னேறிய முதலாவது இலங்கையர் என்ற சாதனையை புரிந்துள்ளார். 

மேலும் ஆசிய மேசைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் வரலாற்றில் முதல் 16 இடங்களுக்குள் நுழைந்த முதலாவது தெற்காசிய வீராங்கனையாகவும் முத்துமாலி பிரியதர்ஷனி தனது பெயரை பதிவு செய்துள்ளார். 

கட்டாரில் இடம்பெற்றுவரும் 25 ஆவது ஆசிய மேசைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியின் 32 பேர் கொண்ட சுற்றின் தனிநபர் மகளிர் போட்டி நேற்று நடந்தது. குறித்த போட்டியில் பாரி மரியம் என்ற ஈரான் வீராங்கனையை எதிர்கொண்ட முத்துமாலி பிரியதர்ஷனி, 3 க்கு 1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அசத்தினார். 

இதில் 5 ற்க்கு 11 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்தார். எனினும், அடுத்தடுத்த மூன்று செட்களையும் முறையே 11 ற்க்கு 7, 11 ற்க்கு 9, 11 ற்க்கு 8 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். எனினும், 16 பேர் கொண்ட சுற்றில் ஜப்பானின் அயட்டார ஹினாவை எதிர்கொண்ட பிரியதர்ஷனி முதல் மூன்று செட்களிலும் தோல்வியடைந்தார். 

இதேவேளை, முதல் 32 இடங்களுக்குள் பிடித்தவர்களுக்கான சுற்றில் இலங்கையின் பிமந்தி பண்டார, தனுஷி ரொட்றிகோ ஆகிய வீராங்கனைகளும், செனூர சில்வா ஆகிய வீரரும் தனிநபர் போட்டிகளில் பங்கேற்றிருந்துடன், இப்போட்டிகளில் வெற்றியையீட்டத் தவறினர். எனினும், இது அவர்களது தனிப்பட்ட சிறந்த பெறுபேறாகும்.

இதுமட்டுமல்லாமல் அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை மகளிர் அணி 12 ஆவது இடத்தையும், இலங்கை ஆண்கள் அணி 18 ஆவது இடத்தையும் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.