பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரான 29 வயது இளைஞன் மரணம்! பொலிஸார் அடித்ததால் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு..
மன்னார் - எலுக்கலம்பிட்டி பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று காலை திடீர் சுகயீனமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருக்கின்றார்.
எருக்கலம்பிட்டி, தர்கா நகர் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரான ரம்ஸான் (வயது-29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மன்னார் எருக்கலம் பிட்டி பகுதியைச் சேர்ந்த இருவர்,
நேற்று இரவு முச்சக்கர வண்டியில் புதுக்குடியிருப்பு பகுதிக்குச் சென்று, மீண்டும் எருக்கலம் பிட்டி கிராமத்தை நோக்கி வந்துள்ளனர். இதன்போது எருக்கலம் பிட்டி- புதுக்குடியிருப்பு பிரதான வீதியில், கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட மன்னார் பொலிஸார்,
குறித்த இருவரையும் மறித்து முச்சக்கர வண்டியை சோதனையிட்ட நிலையில், போதைப்பொருள் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து, மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் குறித்த இருவரையும் இன்று காலை, மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில், ரம்ஸான் (வயது-29) என்ற இளம் குடும்பஸ்தருக்கு திடீர் சுகயீனம் எற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து உடனடியாக மன்னார் பொலிஸார், குறித்த இளம் குடும்பஸ்தரை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருக்க முடியும் என உறவினர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இந்த நிலையில் மேலதிக விசாரணைகளை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை
பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.