SuperTopAds

முடிந்தால் வழக்கு போடலாம்..! சுமந்திரனுக்கு பகிரங்க அறிவிப்பை விடுத்தார் சிவாஜிலிங்கம்..

ஆசிரியர் - Editor I
முடிந்தால் வழக்கு போடலாம்..! சுமந்திரனுக்கு பகிரங்க அறிவிப்பை விடுத்தார் சிவாஜிலிங்கம்..

தேர்தல் காலத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்ட பல கோடி ரூபாய் நிதியை பகிர்ந்து கொடுத்தவர் சுமந்திரனே என வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். 

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் பல விடயங்களை அறியாமல் என்னைப் பற்றி ஏதோ எல்லாம் பேசுகிறார். 

சிவசிதம்பரம் ஐயா காலத்தில் எனது 16 வயதில் வயதிலேயே வேட்டி கட்டி எனது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்தேன் இதனைப் பலர் அறிந்திருப்பார்கள். புதிதாக தேசியப் பட்டியல் ஊடாக அரசியலுக்கு வந்தவர்களுக்கு தெரியாது. 

என்னைப்பற்றி சுமந்திரன் தனியார் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்ததை நான் அவதானித்தேன். வல்வெட்டித்துறை நகரசபை கூட்டமைப்பிடம் இருந்து பறிபோனது அதற்கு சுரேஷ், விக்னேஸ்வரனை துரோகிகள் என்ற அர்த்தத்தில் நான் பேசியதாக 

சுமந்திரன் கருத்து தெரிவித்திருந்தார். நான் விக்னேஸ்வரன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரனை துரோகி என கூறவில்லை. எனது காணொளியை பார்த்தால் நன்கு தெரியும். வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தலைவரை சுமந்திரன் தலையில் தூக்கி வைத்திருக்கிறார்.  

அவர் அவ்வாறு தூக்கி வைப்பதன் காரணம் என்ன? தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சியை விரட்டுவதற்கு இவர்கள் பின்னணியில் நின்று செயற்பட்டமை அனைவருக்கும் தெரியும். அதனை நான் பகிரங்கமாகவே கூறியிருந்தேன்.

நான் ரெலோவில் இல்லாவிட்டாலும் வல்வெட்டித்துறை நகரசபையில் தமிழ்த் தேசியத்தின் ஆட்சி நிலை நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக எனது ஆதரவை வழங்கியிருந்தேன். ரெலோவின் சிவஞான சுந்தரத்தை தவிசாளராக நியமிக்கப்பட வேண்டுமென 

உயர்பீடம் தீர்மானித்தாலும் அவர்தான் அந்த பதவியை சதீஷ்க்கு வழங்குங்கள் என கூறியிருந்தார். நகரசபை கூட்டத்துக்கே வராத சதீஸை கூட்டத்தை பகிஷ்தரித்தார் என ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் கூறுவது 

எவ்வளவு தூரத்திற்கு அறிவு சார்ந்த விடயம் என எண்ணத் தோன்றுகிறது. துரோகி என நான் கூறவில்லை. நான் துரோகி என கூறியதாக சிலர் பிதற்றுகிறார்கள் முடிந்தால் கடிதத்தை பகிரங்க படுத்துங்கள் அப்போது பார்த்துக் கொள்வோம்.

நான் குருநாகலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டமை தொடர்பில் சுமந்திரன் கருத்து தெரிவித்திருந்தார். நான் ஜனாதிபதி வேட்பாளராக குருநாகலில் போட்டியிட்டபோது சர்வதேச விசாரணை வேண்டும் என்று கூறி இருந்தேன். 

அதற்கு ஆதாரமாக வீக்லீஸ் வெளியிட்ட பதிவுகள் இருக்கின்றது. இலங்கைக்கான அமெரிக்க தூதராக இருந்த பற்றீசியா அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பிய செய்தி குறிப்பில் சர்வதேச விசாரணையை கோரும் ஒரே ஒரு தமிழன் சிவாஜிலிங்கம் தான் 

என கூறியிருந்தார். 2010,2015,2019 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில்களில் தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கு பல கோடி ரூபாக்கள் வழங்கப்பட்டது. மட்டக்களப்புக்கு 45 இலட்சம் ரூபாய் சுமந்திரன் தலைமையில் கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. 

இது கட்சியின் நிர்வாக செலவுக்காக வழங்கப்பட்டதோ அல்லது பிரச்சாரத்துக்காக வழங்கப்பட்டதோ வழங்கியவருக்கு தான் தெரியும். ஆகவே பகிரங்கமாகவே சொல்கிறேன் பணம் வழங்கியது உண்மை முடிந்தால் வழக்கு போடுங்கள் 

இன்னும் பல விடயங்கள் அம்பலப்படுத்த வேண்டியுள்ளது அதனை நீதிமன்றத்தில் அம்பலப்படுத்துவேன் என அவர் மேலும் தெரிவித்தார்.