அதிரடி காட்டிய ஹர்திக் பாண்டியா!!- பஞ்சாப் அணியை வீழ்த்தி மும்பை அபார வெற்றி-
பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது.
ஐ.பி.எல் தொடரில் இன்று நடந்த 42ஆவது போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழல்ச்சியில் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் மன்தீப் சிங் களமிறங்கினர்.
நிதானமாக ஆடிய மன்தீப் 14 பந்துகளில் 15 ஓட்டங்கள் எடுத்துவெளியேறினார். அடுத்துவந்த கெயில் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.
அடுத்துவந்த மார்க்ரம் ராகுலுடன் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், கே.எல் ராகுல் 21 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த நிக்கோலஸ் புரன் 2 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். நிலைத்து நின்று ஆடிய மார்க்ரம் 29 பந்துகளில் 42 ஓட்டங்களை எடுத்து வெளியேறினார்.
இறுதியில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ஓட்டங்களை எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் அந்த அணியின் பும்ரா மற்றும் பொல்லார்டு அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து 136 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியின் தலைவர் ரோகித் சர்மா மற்றும் குவிண்டன் டிகாக் களமிறங்கினர். 10 பந்துகளை சந்தித்த ரோகித் 8 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த சூர்யகுமார் ஓட்டம் எதுவும் எடுக்காமல் (0) வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய சவுரவ் திவாரி, டிகாக் உடன் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டிகார் 27 ஓட்டங்களுடன் வெளியேறிய நிலையில் அடுத்துவந்த ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து திவாரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சவுரவ் திவாரி 37 பந்துகளில் 45 ஓட்டங்களை குவித்து நாதன் இலிஸ் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்துவந்த பொல்லார்டு, ஹர்திக் பாண்டியாவுடன் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக ஆடிய பாண்டியா 30 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் உள்பட 40 ஓட்டங்களை குவித்தார்.
இறுதியில், மும்பை அணி 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 137 ஓட்டங்கள் குவித்தது. இதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றிபெற்றது. பஞ்சாப் தரப்பில் அந்த அணியின் ரவி பிஷ்னோய் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.