படுகொலைகளை ஒப்புக்கொண்டு விட்டார் ஜனாதிபதி!
காணாமல் போனவர்களுக்கு இறப்பு பத்திரம் வழங்க முடியுமென தெரிவித்ததன் ஊடாக, அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை ஜனாதிபதி ஏற்றுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களை பற்றி பல்வேறு கருத்துக்களை சொல்லியிருக்கின்றார்கள். அதற்கான விளக்கத்தினை எங்களால் சொல்ல முடியும். எமது இயக்கத்துக்கும் வரலாறு இருக்கின்றது. அந்த வரலாற்றையும் காரணங்களையும் சொல்லமுடியும். தமிழ் மக்களின் விடுதலைக்காக துப்பாக்கி எந்தி போராடியவர்கள் நாம். இப்போதும் மக்களின் விடுதலைக்காக போராடவேண்டும் என்ற சிந்தனையே எமக்குள்ளது.
தனிப்பட்ட முறையில் மாறி மாறி கருத்துக்களை சொல்வதால் மக்கள் வெறுப்படைகின்றனர். நாம் ஒற்றுமையாக செயற்படவேண்டும் என்ற விடயத்தினை கடந்த தேர்தல் மூலம் மக்கள் எமக்கு உணர்த்தியுள்ளனர். எனவே எமது தலைவர்கள் விட்டுச்சென்ற பணியினை தொடர்ந்து முன்னெடுப்போம்.
இதேவேளை ஜிஎஸ்பி பிளஷ் வரிச்சலுகையினை பெற்றுகொள்ளவதற்கான யுக்தியாகவே ஜனாதிபதியின் ஐ.நா உரையை பார்கின்றேன்.
இலங்கையில் வாழும் அனைத்து இனமும் சமம் என்று அவர் தெரிவித்தார். ஆனால் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதில் இருந்து அடிக்கடி ஒரு விடயத்தை அவர் குறிப்பிட்டு வருகின்றார். தான் சிங்கள மக்களின் வாக்குகளாலேயே வெற்றிபெற்றேன் என்றார்.
மேலும், தமிழர் பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் அடக்குமுறைகள் இராணுவ பிரசன்னம், உயிரிழந்தவர்களை நினைவுகூரக் கூட முடியாத இக்கட்டான நிலையில் தமிழினம் இருக்கின்றது.
எனவே, இனங்கள் அனைத்தும் சமன் என்று தெரிவிப்பதை ஏற்கமுடியாது. அது உண்மைக்கு புறம்பானது. காணாமல் போனவர்களுக்கு இறப்பு பத்திரம் வழங்க முடியும் என தெரிவித்ததன் ஊடாக அவர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் என்ற வகையில் ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார். காணாமல் போனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை அவர் ஏற்றுள்ளார்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.