SuperTopAds

கஜேந்திரன் கைது- நாடாளுமன்றம், நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வோம்!

ஆசிரியர் - Admin
கஜேந்திரன் கைது- நாடாளுமன்றம், நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வோம்!

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனின் சிறப்புரிமை தொடர்பில் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பவுள்ளோம். என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

நேற்றைய தினம் நல்லூரில் அமைந்துள்ள திலீபன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முயன்றபோது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கைது செய்யப்பட்டமை தொடர்பில் இன்று அவரது கட்சி அலுவலகத்தில் ஊடக சந்திப்பு இடம்பெற்றது. இதன்போதே கஜேந்திரகுமார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், திலீபனின் நினைவுத் தூபிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தனியாகத்தான் சென்றார். மக்களை அணிதிரட்டவில்லை. வருடா வருடம் குடும்பத்தோடு அமைதியாக அஞ்சலி செலுத்துவார். அது போல இம்முறையும் கடந்த நாட்களாக அஞ்சலி செலுத்தி வந்தார்.

ஆனால் நேற்றைய தினம் அஞ்சலி செலுத்த முயன்ற போது அங்கிருந்த பொலிஸார் தடுத்தனர். எதற்காக தடுக்கிறீர்கள்? நீதிமன்ற தடை உத்தரவு உள்ளதா? என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன், பொலிஸாரிடம் வினாவினார். எனினும் பொலிஸார் தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினரை நினைவு கூற முடியாது என கூறியே அவ்விடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனை கைது செய்தனர்.

எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கைது செய்யப்பட்டு விடுவிக்கும் நேரத்தில் “நினைவுகூறுவது தவறு என நாங்கள் வழக்கு தாக்கல் செய்யவில்லை கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாலே கைது செய்தோம்” என பொலிஸார் கூறினர்.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் அவ்விடத்தில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றியே நினைவேந்தல் செய்ய முற்பட்டார். பொலிஸாருக்கும் தனக்கும் இடையில் ஒரு சமூக இடைவெளியைக் கூட அவர் பின்பற்றியிருந்தார். ஆனால் பொலிஸாரே தனிமைப்படுத்தல் விதிகளை மீறி செயற்பட்டனர். அராஜகமாக கஜேந்திரனின் உடலை பிடித்து, காலால் தட்டி கலவரம் போன்ற நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அவர் கைது செய்யப்பட்டதை அறிந்து அவ்விடத்திற்குச் சென்ற எமது கட்சியின் இரு பெண் உறுப்பினர்கள் பொலிஸாரால் சட்டவிரோதமாக கையாளப்பட்டனர்.

கொரோனா விதிமுறைகளை மீறியதாக கஜேந்திரன் எம்.பி கைது செய்யப்பட்டிருந்தால் அவர் அவ் நினைவிடத்திற்குச் சென்ற பொழுதே கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். ஏன் கற்பூரம் ஏற்றி நினைவேந்தல் செய்ய முற்பட்ட போது கைது செய்யப்பட்டார்.

கஜேந்திரன் எம்.பியை கைது செய்தமைக்கு கொரோனா விதிமுறைகள் காரணமல்ல நினைவேந்தல் செய்தமையே காரணம் என தெரிகிறது. ஏனெனில் நினைவேந்தல் மேற்கொண்ட இடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மாத்திரம் இருக்கவில்லை. ஊடகவியலாளர்கள் இருந்தார்கள், திலீபனின் நினைவிடத்தில் பொலிஸார் வந்தததை அறிந்ததும் பல பொதுமக்களும் கூடினார்கள்.

கொரோனா விதிமுறைகளை மீறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மீது நடவடிக்கை எடுத்திருந்தார்கள் எனில் ஏன் அங்கு கூடிய மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. உண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் சுகாதார விதிமுறைகளை மீறவில்லை. அவர் நினைவேந்தல் மேற்கொண்டமைக்காவே கைது செய்யப்பட்டார்.

யாழ் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெனான்டோ மற்றும் நேற்றைய சம்பவத்தோடு தொடர்புடைய ஏனைய பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டோம். 27 ஆம் திகதி பொலிஸாரின் நடவடிக்கைகளை பொறுத்து எமது நடவடிக்கைகள் தொடரும். இது தொடர்பில் அடிப்படை மனித உரிமைகள் மீறல் சம்பந்தமாக வழக்கு தாக்கல் செய்வது தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

சபாநாயகருக்கும் தெரியாமல் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டிருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனின் சிறப்புரிமை தொடர்பில் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பவுள்ளோம். சட்டரீதியான ஆலோசனைகளையும் பெறவுள்ளோம்.

ஐ.நா. அமர்வுகள் நடைபெறுகின்ற நிலையில் கூட பொலிஸார் இவ்வாறு நடந்து கொள்கின்றனர். கஜேந்திரனை கண்ணியமாக அழைத்துச் சென்றிருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாது கற்பூரம் கொளுத்தும் போதே பொலிஸார் நினைவேந்தலை தடுக்கும் முகமாக செயற்பட்டனர்.

தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் இந்த அரசாங்கம் கொடுக்கும் எந்த ஒரு வாக்குறுதியையும் சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் நாம் மீண்டும் ஒருமுறை ஆணித்தரமாக கூறுகின்றோம்” என்றார்.