வடமாகாணத்தில் கொரோனா தொற்று மற்றும் கொரோனா இறப்பு எண்ணிக்கை வீழ்ச்சி..! மாகாண சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள அறிக்கை..

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தில் கொரோனா தொற்று மற்றும் கொரோனா இறப்பு எண்ணிக்கை வீழ்ச்சி..! மாகாண சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள அறிக்கை..

வடமாகாணத்திலிருந்து சுமார் 95 பேருடைய உடலங்கள் மின் தகனத்திற்காக வெளி மாகாணங்களுக்கு அனுப்பபட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை வெளி மாகாணங்களுக்கு மின் தகனத்துக்கு அனுப்பிவைக்கப்படுவது தொடர்பில் , அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேற்படி விடயம் தொிவிக்கப்பட்டுள்ளது, அதில் மேலும் இடம்பெற்றுள்ளதாவது, 

வடமாகாணத்தில் கடந்த ஓகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதி முதல் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும், இறப்புக்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துள்ளது. வடமாகாணத்தில் இதுவரை 34 ஆயிரத்து 764 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள். 

இவர்களில் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் 14 ஆயிரத்து 586 தொற்றாளர்களும் செப்ரெம்பர் முதல் 20 நாள்களிலும் 7 ஆயிரத்து 685 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேபோல வடமாகாணத்தில் இதுவரை கொரோனா தொற்று காரணமாக 

685 இறப்புக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதில் ஓகஸ்ட் மாதம் மட்டும் 228 இறப்புக்களும் செப்ரெம்பர் மாதம் முதல் 20 நாள்களில் 276 இறப்புக்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சின் விதிமுறைகளுக்கமைய கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட உடலங்கள் 

தகனம் செய்யப்பட வேண்டுமாயின் மின் தகன சாலையிலேயே தகனம் செய்ய முடியும். வடமாகாணத்தை பொறுத்தவரை யாழ்ப்பாணம் மாநகர சபையிலும், வவுனியா நகர சபையிலும் என இரண்டு மின்தகன சாலைகள் மட்டுமே காணப்படுகின்றன.

இவற்றில் ஒரு நாளைக்கு ஆகக்கூடியது 11 உடலங்களை மட்டுமே தகனம் செய்ய முடியும். ஆனால் ஓகஸ்ட் மாத நடுப்பகுதியின் பின்னர் இறப்புக்களில் ஏற்பட்ட சடுதியான அதிகரிப்பினால் மின் தகனத்திற்காக உடலங்கள் பல நாள்கள் 

காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. செப்ரெம்பர் மாதம் 3ம் திகதிய நிலவரப்படி 54 உடலங்கள் மின் தகனத்திற்காக வடமாகாணத்தில் தேங்கியிருந்தன. இந்த உடலங்களை உரிய சுகாதார பாதுகாப்பு நடைமுறையில் பேணுவதற்குரிய குளிரூட்டி வசதிகள் 

மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருந்ததால் 54 உடலங்களையும் உரிய முறையில் பேணுவதில் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கினோம். எனவே மாகாணத்திற்கு வெளியே உள்ள மின் தகன சாலைகளுக்கு உடலங்களை அனுப்பவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டோம்.

எமது வேண்டுகோளிற்கு அமைவாக ஜனாதிபதி வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைய, வடமாகாண ஆளுநர், பிரதம செயலாளர் மற்றும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஆகியோரின் முயற்சிகளின் பலனாக 

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்த உடலங்களை மின்தகனம் செய்வதற்குரிய அனுமதி கிடைக்கப் பெற்றது. அதன் அடிப்படையில் செப்ரெம்பர் மாதம் 5ஆம் திகதி முதல் இன்று வரை 95 உடலங்கள் மின் தகனத்திற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. 

இதில் 79 உடலங்கள் வடமத்திய மாகாணத்திற்கும் 16 உடலங்கள் கிழக்கு மாகாணத்திற்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து 45 உடலங்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 28 உடலங்களும் 

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து 14 உடலங்களும் வவுனியா மாவட்டத்தில் இருந்து 8 உடலங்களும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. வேறு மாகாணங்களிற்கு மின் தகனத்திற்காக அனுப்பப்படும் உடலங்கள் உறவினர்களின் சம்மதத்துடனேயே அனுப்பிவைக்கப்படுகின்றன. 

மேற்படி உடலங்களை வேறு மாகாணங்களுக்கு அனுப்புவதற்கான வாகன மற்றும் பயண செலவினையும் உடலங்களை கொண்டுசெல்வதற்கான சவப் பெட்டிகளுக்கான செலவினங்களையும் சில நன்கொடையாளர்களும், 

பொது அமைப்புக்களும் பொறுப்பெடுத்திருந்தனர். இந்நிலையில் கடந்த ஒருவார காலமாக வடமாகாணத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கையிலும் இறப்புக்களின் எண்ணிக்கையிலும் வீழ்ச்சி ஏற்படுவதை அவதானிக்க் கூடியதாக உள்ளது. 

எனவே கடந்த வாரத்தில் வெளி மாகாணங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் உடலங்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது. வட மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நெருக்கடியான சூழ்நிலையில் எமக்கு கைகொடுத்த வடமத்திய 

மற்றும் கிழக்கு மாகாண அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த இறுக்கமான சூழ்நிலையில் கொவிட்-19/தொற்றிற்கு உள்ளான உடலங்களை வெளி மாகாணங்களிற்கு கொண்டு செல்வதற்குரிய

ஏற்பாடுகளை செய்வதற்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் வடமாகாண சுகாதார திணைக்களத்தின் சார்பில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். மின் தகனம் செய்வதற்குரிய வாகன ஒழுங்குகளை மேற்கொண்டும் 

மேலும் பல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய இராணுவத்தினர் மற்றும் பொலிஸாருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். இலங்கையின் பல மாவட்டங்களில் 3 முதல் 4 வரையான மின்தகன சாலைகள் காணப்படுகின்றன. 

ஆனால் வடமாகாணம் முழுவதற்கும் இரு மின்தகன சாலைகள் மட்டுமே இருக்கின்றன. எனவே மேலும் சில மின் தகன சாலைகளை அமைக்கவேண்டியது காலத்தின் கட்டாயமும் எதிர் காலத்தின் தேவையும் ஆகும்.

தற்போது வடமாகாணத்தில் உள்ள சில உள்ளூராட்சி மன்றங்கள் மின்தகன சாலைகளை அமைப்பதற்குரிய முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. எனவே காலத்தின் தேவையை உணர்ந்து இயன்றளவு விரைவில் 

வடமாகாணத்திற்கு தேவையான மின்தகன சாலைகளை அமைக்க சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு