மதுபானசாலைக்கு சீல்..! 13 மதுப்பிரியர்கள் கைது, மதுவரித்திணைக்களத்தின் விளக்கத்தை துாக்கி எறிந்து சுகாதார பிரிவு அதிரடி..
நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் இன்று மாலை திடீரென மதுபானசாலைகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் வவுனியா மாவட்டத்தில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் எதுவுமில்லாமல் மதுபானசாலை முன்பாக கூடிய 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மதுபானசாலைகள் முன்பாக அதிகளவிலான மதுப் பிரியர்கள் திரண்டிருந்தனர். அத்துடன் நகரின் கண்டி வீதியில் அமைந்திருந்த மதுபானசாலை ஒன்று திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது. அங்கு சென்று சுகாதாரப் பிரிவினரும், பொலிசாரும் மதுபானசாலை முன்பாக நின்றோர்,
வீதிகளில் சென்றோர், வானங்கள், மோட்டார் சைக்கிள்களை மறித்து சோதனை செய்ததுடன், 13 பேரை கைது செய்தனர். சம்பவ இடத்திற்கு மதுவரி திணைக்கள அதிகாரிகள் வருகை தந்து மதுபானசாலைகளை திறப்பதற்கு தாம் அனுமதி வழங்கியதாகவும், திறக்க முடியும் எனவும் தெரிவித்தனர். ஆனால், சுகாதாரப் பிரிவினர்
அதிகளவிலானவர்கள் சுகாதார நடைமுறைகளை மீறி திரண்டு இருந்தமையால் அனுமதி வழங்க முடியாது எனத் தெரிவித்து, குறித்த மதுபானசாலையை தனிமைப்படுத்தியதுடன் மதுபானசாலை முன் நின்றோர், வீதிகளில் சென்றோர் என 13 பேரை கைது செய்திருந்தனர்.