SuperTopAds

டெலிகிராம் செயலியை தடை செய்யும் ரஷ்யா.

ஆசிரியர் - Admin
டெலிகிராம் செயலியை தடை செய்யும் ரஷ்யா.

டெலிகிராம் தகவல் செயலியின் பயன்பாட்டை உடனடியாக தடைசெய்யக் கோரிய ரஷ்யாவின் ஊடக ஒழுங்கு முறை ஆணையத்தின் வேண்டுகோளை மாஸ்கோ நீதிமன்றம் ஒன்று ஏற்றுக்கொண்டது. டெலிகிராம் தகவல் செயலியின் பயன்பாட்டை உடனடியாக தடைசெய்யக் கோரிய ரஷ்யாவின் ஊடக ஒழுங்கு முறை ஆணையத்தின் வேண்டுகோளை மாஸ்கோ நீதிமன்றம் ஒன்று ஏற்றுக்கொண்டது.

நிறுவனம் செய்திகளை அகற்றும் மறை குறியாக்க விசைகளை ஒப்படைக்க மறுத்துவிட்டதால், அந்த செயலியைத் தடை செய்ய வேண்டும் என ரஷ்ய ஊடக ஒழுங்குமுறை ஆணையம் கோரியது.

பயங்கரவாதிகள் என்று சந்தேகப்படுபவர்களை கண்காணிப்பதற்காக செயலியின் மறை குறியாக்க விசைகளை ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நிறுவனத்திடம் கோரினர்.

ஏப்ரல் நான்காம் தேதிக்குள் செயலியின் மறைகுறியாக்க விசைகளைத் தரவேண்டும் என்று காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், வாடிக்கையாளர்களின் மறைகுறியாக்க விசைகளை தங்கள் செயலியில் அணுக வாய்ப்பில்லை என்று டெலிகிராப் செயலி நிறுவனம் கூறிவிட்டது.

"ரஷ்யாவில் உள்ள சர்வதேச பயங்கரவாத அமைப்புக்கள்" தேர்வு செய்யும் செயலியாக டெலிகிராம் இருப்பதாக ரஷ்யாவின் பிரதான பாதுகாப்பு முகமை FSB கூறுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் சுரங்கப்பாதை ஒன்றில் 15 பேரைக் கொன்ற தற்கொலை குண்டுதாரி, தனது கூட்டாளிகளுடன் தொடர்புகொள்வதற்காக டெலிகிராம் செயலியை பயன்படுத்தியதை விசாரணையின்போது தெரிவித்ததாக எஃப்.எஸ்.பி. கூறியது.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், ரஷ்ய அதிகாரிகள் என அனைத்து தரப்பினராலும் டெலிகிராம் செயலி பரவலாக பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

டெலிகிராம் செயலி நிறுவனம் "தகவல் விநியோகிப்பாளராக" தனது சட்டபூர்வமான தேவைகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக ரஷ்ய ஊடக ஒழுங்குமுறை ஆணையம் ரோஸ்கோம்ண்ட்ஜர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.

டெலிகிராம் செயலியின் பயன்பாட்டை நிறுத்தும் அரசின் அதிகாரபூர்வ முயற்சி "அடிப்படையற்றது" என்று நிறுவனத்தின் வழக்கறிஞர் பவெல் சிகோவ் தெரிவித்தார்.

"பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்களை அணுகுவதற்கான எஃப்.எஸ்.பி.யின் முயற்சிகள் தொழில்நுட்ப ரீதியாகவும் சட்டரீதியாகவும் நிறைவேற்றப்பட முடியாதவை. செயலிகளை இவ்வாறு அணுக நினைப்பது அரசியலமைப்புக்கு எதிரானது, அடிப்படையற்றது" என்று நிறுவனத்தின் வழக்கறிஞர்

ரஷ்யாவிலும் பல மத்திய கிழக்கு நாடுகளிலும், உலகின் மற்ற பகுதிகளிலும் பரவலாக பயன்படுத்தப்படும் டெலிகிராம் செயலி, 200 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது.

மறை குறியாக்க பாதுகாப்பின் காரணமாக டெலிகிராம் செயலி மிகவும் பிரபலமானது. தகவல்களின் ரகசியத்தை பேணிகாக்கும் இந்த செயலி, அனுப்பும் செய்திகளை வேறு யாரும் படிக்க முடியாதவாறு பாதுகாக்கப்பட்டுள்ளது.

ஒரு குழுவில் 5,000 நபர்கள் வரை சேர அனுமதிக்கும் இந்த செயலியில் பதிவுகள் இடுவதோடு, ஆவணங்கள், வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை கட்டணம் இல்லாமல், முழுமையான குறியாக்கத்துடன் பாதுகாப்பாக அனுப்ப முடியும்.

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் தீவிரவாதக் குழுவும், அதன் ஆதரவாளர்களும் டெலிகிராம் செயலியை பயன்படுத்துகின்றனர். ஆனால் ஐ.எஸ் அமைப்பும், அதன் ஆதரவாளர்களும் இந்த செயலியை பயன்படுத்துவதை தடுக்க தேவையான முயற்சிகளை எடுத்துள்ளதாக டெலிகிராம் செயலி நிறுவனம் கூறியிருக்கிறது.