SuperTopAds

சிறைச்சாலைக்குள் நுழைந்து தமிழ் அரசியல் கைதிகளை முழங்காலில் இருத்தி சித்திரவதை, துப்பாக்கியை காட்டி கொல்வேன் என அச்சுறுத்திய அமைச்சர்..!

ஆசிரியர் - Editor I
சிறைச்சாலைக்குள் நுழைந்து தமிழ் அரசியல் கைதிகளை முழங்காலில் இருத்தி சித்திரவதை, துப்பாக்கியை காட்டி கொல்வேன் என அச்சுறுத்திய அமைச்சர்..!

சிறைச்சாலைக்குள் நுழைந்த இராஜாங்க அமைச்சர் தமிழ் அரசியல் கைதிகளை முழங்காலில் இருத்தி துப்பாக்கி முனையில் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறினார். 

மேற்படி விடயம் தொடர்பான நாடாளுமன்ற உறுப்பினர் தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை செய்துள்ளார். அதன்படி அனுராதபுரம் சிறைச்சாலைக்கு கடந்த 12ம் திகதி மாலை சென்றிருந்த இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த

தமிழ் அரசியல் கைதிகள் இருவரை அழைத்து அவர்களை முழங்காலில் இருத்தியதுடன் சிறைச்சாலைக்குள் துப்பாக்கியை காண்பித்து கொலை அச்சுறுத்தி விடுத்ததுடன் தாம் நினைத்தால் அந்த இடத்திலேயே கொலை செய்ய முடியும் எனவும் கூறியுள்ளார். 

இந்த சம்பவத்தை உறுதிப்படுத்த முடியும். என கூறியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அமைச்சரின் இந்த நடத்தையை வன்மையாக கண்டிப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார். 

அதேபோல் மிக கொடுமையான சட்டமான பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டு அதிர்ச்சியில் உள்ளவர்களின் விடயத்தை கவனிக்கவேண்டிய அமைச்சர் ஒருவர் இவ்வாறு நடந்துகொள்ள முடியாது. 

இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு அமைச்சர் உடனடியாக பதவி நீக்கப்படவேண்டும். மேலும் அவரிடமிருந்து இதர பதவிகளும் நீக்கப்படவேண்டும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தி நிற்கும் அதேவேளை, 

இலங்கையின் மீது ஐ.நா மனிரத உரிமைகள் ஆணையகத்தின் கவனம் உள்ளபோதும்  ஒரு அமைச்சர் இப்படி நடந்து கொள்வதன் ஊடாக அரசு ஐ.நா விடயத்தில் கவலைப்படாமல் உள்ளது என்பதை வெளிப்படையாக காட்டுகின்றது. 

அந்தவகையில் ஐ.நா மனித உரிமை ஆணையகத்திற்கு அப்பால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையை கொண்டு செல்லாவிட்டால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களின் நிலைமை மிக மோசமாகும் என அவர் கூறியுள்ளார்.